

அரியலூர்
வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ.குரு மணிமண்டபம் திறப்பு விழா அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் நேற்று நடைபெற்றது. பாமக சார்பில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட ஜெ.குரு மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்த காரிலேயே ஜெ.குருவின் மகன் கனலரசனும், மனைவி சொர்ண லதாவும் வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பாமக நிறுவனர் ராம தாஸை கடுமையாக விமர்சித்து பொது இடங்களில் பேசி வந்த குருவின் மகன் கனலரசன், நேற்று நடைபெற்ற மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொண்டதுடன், பொதுக்கூட்ட மேடையில் ராமதாஸுடன் ஒரே மேடையில் தனது தாயாருடன் அமர்ந்திருந்தார்.
பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தைப் போன்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விளம்பர பேனர்
கலாச்சாரம் கிடையாது. பாமகவினர் பேனர், தட்டி எதுவும் வைக்கக் கூடாது. சுவர் விளம்பரம் செய்யக் கூடாது.
பூம்புகாரில் மாநில வன்னியர் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு திரளான பெண்களை அழைத்துவர வேண்டும் என்றார்.
இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
இந்தியாவில் முதல் முதலாக தொண்டனுக்கு தலைவன் மணிமண்டபம் கட்டிய நிகழ்ச்சி இங்கு நிகழ்ந்துள்ளது. ராம
தாஸுக்கும், குருவுக்கும் பிரச்சினை என சூழ்ச்சியாளர்கள் கூறி வந்தனர். குருவின் கடைசி ஆசை,
பாமக ஆளவேண்டும் என்பதே. கண்டிப்பாக பாமக தனித்துப் போட்டியிட்டு 120 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும் என்றார். விழாவுக்கு பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.