Published : 17 Sep 2019 09:15 PM
Last Updated : 17 Sep 2019 09:15 PM

உயிருக்கு போராடியவருக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப மறுப்பு: ஊழியரை பணி நீக்கம் செய்ய 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் முடிவு

சென்னையில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடியவரின் மனைவி ஆம்புலன்ஸ் உதவி கேட்டபோது அனுப்ப மறுத்த ஊழியரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக 108 ஆம்புலன்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் சாரங்கன் அவென்யூவில் உள்ள கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேதுராஜன்(42). அதே பகுதியில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் வசிக்கும் வீட்டு வாசலில் நாய் ஒன்று குட்டிப்போட்டிருந்தது. பணிக்கு போகும்போதும் வரும்போதும் அதற்கு உணவளிப்பது விளையாடுவது என இருந்துள்ளார். நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு இரவு உணவு உண்டப்பின்னர் மீதமுள்ள உணவை வீட்டிற்கு வெளியே குட்டியுடன் இருக்கும் தெரு நாய்க்கு வைப்பதற்காக எடுத்துச் சென்றார்.

அவரது வீட்டு வாசல் வழியாக மின் கம்பி மின்கம்பம் வழியாக செல்கிறது. அதில் சேதமடைந்த சிமெண்ட் மின் கம்பம் திடீரென உடைந்து மின்கம்பி கீழே சாய்ந்தது. மின் கம்பம் சாய்ந்ததால் உயர் அழுத்த மின்சார வயர்கள் சாலையில் விழுந்தது. அப்போது நாய்க்கு உணவளிக்கச் சென்ற சேதுராமன்மீது மின்சார வயர்கள் விழுந்து மூடியது. இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இவை அனைத்தும் சில நொடிகளுக்குள் நடந்துவிட்டது. மின்சாரம் பாய்ந்ததால் சேதுராமன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரது உடல் நிலையைச் சோதித்த மருத்துவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கணவர் உயிரைக் காப்பாற்ற அவரது மனைவி 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்வார், பதற்றத்துடன் தனது கணவர் ஷாக் அடித்து உயிருக்கு போராடுகிறார், இங்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல சொல்கிறார்கள் கொஞ்சம் 108 ஆம்புலன்ஸ் வருமா என கேட்கிறார்.

ஆனால் தனியார் மருத்துவமனையிலிருந்து கொண்டுச் செல்லப்படும் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் வராது நீங்கள் அங்கேயே வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பேசி போனை வைத்து விட்டார். பின்னர் அவர்கள் வண்டிபிடித்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்குள் கணவர் சேதுராஜன் உயிரிழந்துவிட்டார்.

பதைபதைப்புடன் கணவன் உயிருக்காக்க பேசும் மனைவி, மனிதாபிமானம் இல்லாமல் பதிலளிக்கும் ஊழியர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த கண்டனமும் எழுந்தது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு தொடர்புக்கொண்டு கேட்டபோது அதன் அதிகாரி வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட ஊழியரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊழியர் நடைமுறையை சரியாக பின்பற்றியிருந்தாலும் அவர் வாடிக்கையாளரை கையாண்ட விதம் தவறு. பாதிக்கப்பட்டவரின் நிலைக்குறித்து கேட்டறிந்திருக்கவேண்டும், அவ்வாறு அவர் செய்யவில்லை. விதிகளை பின்பற்றினாலும் ஆம்புல்ன்ஸ் என்பது சேவைத்துறை என்பதை அவர் மறந்துவிட்டார், அவரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x