Published : 17 Sep 2019 08:50 PM
Last Updated : 17 Sep 2019 08:50 PM

உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு சோதனைகளுக்கு ஒத்துழைக்கவும்: வழக்கறிஞர்களுக்கு போலீஸார் வேண்டுகோள்

சென்னை

உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டு பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்களுக்கு போலீஸ் கடிதம் எழுதியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சிஐஎஸ்எஃப் மற்றும் சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.

டெல்லியை சேர்ந்த ஹர்தர்சன் சிங் நாக்பால் என்பவர் பெயரில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நேற்று வந்த கடிதத்தில் வரும் செப்டம்பர் 30-ம் தேதியன்று உயர்நீதிமன்ற கட்டிடத்தில் உள்ளே தனது மகனுடன் சேர்ந்து தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகளை நடத்தப் போவதாகவும், பல மாநிலங்கள் வழியாக இடம் பெயர்ந்து, பல சிம் கார்டுகளில் தாம் மாற்றி மாற்றி பயன்படுத்தி வருவதால் தன்னை பிடிக்க முடியாது என எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருகின்ற 30-ம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என வட மாநிலத்திலிருந்து மர்ம கடிதம் வந்த நிகழ்வு குறித்தும், பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்க சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழு நீதிபதிகள் வினீத் கோத்தரி, மணிக்குமார், சசிதரன், ரவிச்சந்திரபாபு, கிருபாகரன், பி.என்.பிரகாஷ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கமாண்டண்ட் ஸ்ரீராம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். ஆலோசனைக்கு பின்னர் சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் துணை ஆணையர் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரும் வழக்கறிஞர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக்கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கான உடையில் வந்தாலும், தங்களின் வழக்கறிஞர் அடையாள அட்டையை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

வழக்கறிஞர்களின் வாகனங்கள் பரிசோதனைக்கு பின்னர் தான் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும், வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்கறிஞர்கள் நிச்சயம் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வேண்டுகோள் கடிதம் பார் கவுன்சிலுக்கும், வழக்கறிஞர்களின் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு கடும் சோதனைக்குப்பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவர் என முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்படாமல் இருக்கவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x