

சென்னை,
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்ட பேனரை, அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மதிமுக மாவட்டச் செயலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய வீச்சும் , ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளும், பொதுமக்களின் கோபம் அரசியல் கட்சிகளையே ஆட்டிப்பார்த்தது.
நாங்கள் இனி பேனர் வைக்கமாட்டோம் என அறிவித்தனர். அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை என அறிவித்த சென்னை மாநகராட்சி, இதைக்கண்காணிக்கவும், பொதுமக்கள் புகார் அளிக்கவும் சென்னை முழுதும் ரோந்து வாகனங்களும், மூன்று வட்டார அலுவலகத்துக்கு 3 புகார் எண்களை அளித்தது.
இந்நிலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இந்த விழாவிற்காக சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் மதிமுக கட்சி கொடிகம்பங்கள் மற்றும் சிறிய அளவிலான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மாநகராட்சி செயற்பொறியாளர் வரதராஜன், மற்றும் ஊழியர்கள் திவாகர் மற்றும் கண்ணன் ஆகியோர் தாடாண்டர் நகருக்குச் சென்று அவற்றை அகற்றி உள்ளனர். அப்போது அங்கு வந்த மதிமுகவினர் மாநகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
மாநகராட்சி ஊழியர்களை அடித்து விரட்டும் காட்சி பதிவு செய்யப்பட்டு வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், சைதாப்பேட்டை போலீஸார் மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.