Published : 17 Sep 2019 06:04 PM
Last Updated : 17 Sep 2019 06:04 PM

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக எழுந்த புகார்: கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நக்கலக்கட்டை கிராம மக்கள் 

கோவில்பட்டி

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக எழுந்த புகாரில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை நக்கலக்கட்டை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலி பிரச்சாரம் செய்வதாகக் கூறி மனு அளித்து நடவடிக்கை கோரினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எட்டயபுரம் அருகே நக்கலக்கட்டையைச் சேர்ந்த சக்கரச்சாமி மனைவி சண்முகவேல்தாய். இவரும் இவரது உறவினர்களும் நேற்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்கள் குடும்பம் உள்ளிட்ட 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர் என மனு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நக்கலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் வழங்கிய மனுவில், "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த முத்தால்ராஜ் - சண்முகவேல்த்தாய் என்பவர்கள் 6.92 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர்.

இந்த நிலத்துக்கான திட்ட வரைவில் பாதை உள்ளது. அதை விட்டு விட்டு ஊருக்குள் செல்லும் விதமாக பாதை இல்லாத, புறம்போக்கு நிலத்தின் வழியாக செல்வதற்கு புதிய பாதையை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு தேவையில்லாமல் கிராம மக்களை அலைக்கழித்து வருகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் சிலர் தூண்டுதலின் பேரில் உயர்மட்ட அரசு அலுவலர்களிடம் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி போராட்டம் என அறிவித்து மிரட்டி வருகின்றனர்.

எங்கள் கிராமத்தில் யாரையும் ஒதுக்கிவைக்கவில்லை. இயல்பான சகஜமான வாழ்க்கைதான் நடந்து வருகிறது. வேண்டுமென்றே ஒதுக்கி வைத்ததாக சொல்லி வருகின்றனர். நாங்கள் கிராமவாசிகள். பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழில் வேலையும், கால்நடை வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறோம்.

அவர்கள் ரியல் எஸ்டேட், வியாபாரம் போன்ற துறையில் உள்ள பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ளனர். எங்களை தொழில் செய்ய விடாமல் அலைக்கழித்து வருகின்றனர்.

இதனை ஆய்வு செய்து தூண்டிவிடுபவர்களிடமிருந்து முத்தால்ராஜ் - சண்முகவேல்த்தாய் குடும்பத்தை மீட்டு, ஒரு அமைதியான சூழலை உருவாக்கி தர வேண்டுகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

-எஸ்.கோமதி விநாயகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x