Published : 17 Sep 2019 06:20 PM
Last Updated : 17 Sep 2019 06:20 PM

ஜனநாயகம் குறித்த அமித்ஷா கருத்து, அதிபர் ஆட்சியைக் கொண்டு வரும் முயற்சி: திருச்சி சிவா

ஜனநாயகம் குறித்து அமித்ஷா தெரிவித்த கருத்து, அதிபர் ஆட்சியை கொண்டு வரும் முயற்சி என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று பேசிய அமித் ஷா, பல கட்சி ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டதாக மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்துப் பேசிய திருச்சி சிவா எம்.பி., "பல கட்சி ஆட்சி முறை தேவைதானா என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே தேர்தல் என்று ஆரம்பித்து, ஒரே கல்வி முறை என்று சொல்லி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி, ஒரே சமயம் என்று தொடர்கிறது.

இப்போது ஒரே கட்சி, அடுத்து ஒரே ஆட்சி. இந்தியா உலக அரங்கில் மரியாதை பெற்ற நாடு. இதற்குக் காரணம் இந்தியா ஒரு தலைசிறந்த ஜனநாயகம் கொண்ட நாடு.

ஒற்றை ஆட்சிமுறை என்று சொன்னால் ஒரு கட்சி. ஒரு கட்சி முறை என்று சொன்னால் சர்வாதிகாரம் என்றும் சொல்லலாம். அதிபர் ஆட்சி முறை என்றும் சொல்லலாம்.

சர்வாதிகாரம் என்றால் ஜனநாயகம் இல்லை என்று பொருள். அதிபர் ஆட்சி முறை என்றால் பெயரளவில் ஜனநாயகம் இருக்கும். ஆனால் அதிகாரமெல்லாம் அதிபர் கையில் இருக்கிறது. அவர்கள் இதை நோக்கியே பயணிக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x