

சாத்தூர்
சாத்தூரில் இயங்கிவரும் காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பேராசிரியர்கள் இல்லாததால் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் கட்டாய விடுப்பு அறிவித்துள்ளது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் கடந்த 2011-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக உறுப்பு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.
இக்கல்லூரியில் கணிதம், ஆங்கிலம், வணிகவியல், தமிழ் துறைகள் இயங்கி வருகின்றன. சாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் இங்கு படித்து வருகின்றனர்.
இக்கல்லூரியில் மொத்தம் 24 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு வரை இப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களாவே பலர் பணியாற்றி வருகின்றனர்.
இதில் 7 பேர் கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அதன்பின்னரும் கல்லூரி தொடங்கி 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. புதிய பேராசிரியா்களை நியமனம் செய்வதிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். அவர்களது கல்வியும் பாதிக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர்கள் இல்லாமல் வகுப்பு நடத்தப்படாதபோதும் தினந்தோறும் மாணவர்கள் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர். குறிப்பாக 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படாததால் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முதல் சாத்தூரில் இயங்கி வரும் மதுரை காமரசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் 240 மாணவர்களை காலவரையற்ற கட்டாய விடுப்பில் கல்லூரி நிர்வாகம் அனுப்பிவுள்ளது.
அடுத்த மாதம் பருவத்தேர்வு நடக்கவுள்ள நிலையில், மாணவா்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்கி இருப்பது மாணவா்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் முத்துக்குமார், "பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர்களை நியமனம் செய்யவில்லை. பேராசிரியர்கள் இல்லாததால் கல்லூரிக்கு வரும் மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் காணப்படுகிறது.
விரைவில் புதிய பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதுவரை மாணவா்களுக்கு விடுப்பு அளிக்கபட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.