

சென்னை
முகலிவாக்கத்தில் மாநகராட்சியினர் தோண்டிய பள்ளம் மூடப்படாத நிலையில் தேங்கிய மழைநீரில் மின் வாரிய கேபிள் வழியாக கசிந்த மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை போரூரை அடுத்துள்ள முகலிவாக்கம் சுபஸ்ரீ நகர் நாலாவது விரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில்(40) இவரது மனைவி வனிதா (35) இவர்களுக்கு தீனா(14) உட்பட 2 மகன்கள் உள்ளனர். செந்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். பெரிய மகன் தீனா எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
தீனா வசிக்கும் வீட்டுக்கு பின்புறம் உள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன்பாக சென்னை மாநகராட்சி பணிக்காக பள்ளம் தோண்டி உள்ளனர். அந்தப்பணி இன்னும் முடிவடையாத நிலையில் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர்.
தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்சார கேபிள் வெளியே வந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்தப்பள்ளம் மழைநீரால் நிரம்பி சாலையில் நீர் தேங்கியிருந்துள்ளது. பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சாலையில் கிடந்த மின்சார கேபிளால் மின்கசிவு ஏற்பட்டு நீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் தீனா, கடந்த 15-ம் தேதி இரவு தனது தந்தையின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அந்த வழியாக வாகனத்தை தள்ளிச் சென்றுள்ளார். தண்ணீர் தேங்கிய இடத்தில் தரை மேல் செல்லும் மின்சார ஒயரை தெரியாமல் மிதிக்க மின்சாரம் தாக்கியதில் தண்ணீரிலேயே சுருண்டு உயிரிழந்தார்.
இந்தச்செய்தியை அறிந்த பொதுமக்கள் சிறுவனின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
மழைநீர் வடிகால் கட்ட தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாதது மனித உரிமை மீறல் அல்லவா எனக் கேள்வி எழுப்பிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன், சிறுவன் பலியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.