மாற்றுக்கட்சி நபரை தனது கட்சி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிப்பது தேர்தல் நடைமுறை மோசடி ஆகாதா?- உயர் நீதிமன்றம் கேள்வி 

மாற்றுக்கட்சி நபரை தனது கட்சி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிப்பது தேர்தல் நடைமுறை மோசடி ஆகாதா?- உயர் நீதிமன்றம் கேள்வி 
Updated on
1 min read

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்.பி க்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் திமுக, அதிமுக, தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், விழுப்புரத்தில் விசிக ரவிக்குமார், நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், ஈரோட்டில் மதிமுக கணேசமூர்த்தி மற்றும் பெரம்பலூரில் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியைப்செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்தக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பது தேர்தல் நடைமுறைகளில் மோசடி செய்ததாக ஆகாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

.தேர்தல் அறிக்கையைவிட சின்னத்தை வைத்துதான் மக்கள் உறுப்பினரை தேர்வு செய்கின்றனர் என்று தெரிவித்தனர். அப்போது தேர்தல் ஆணையத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது வாதத்தில், “ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்கிற விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதால் அதை எதிர்த்து தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும். ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தததல்ல”. என தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, மற்றும் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ.12-க்கு ஒத்தி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in