Published : 17 Sep 2019 12:53 PM
Last Updated : 17 Sep 2019 12:53 PM

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம்: 3 ஆண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும்; அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி, ஈரோடு பெரியார், அண்ணா நினைவகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"காலாண்டு தேர்வுக்குப் பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி. மத்திய அரசின் மூலமாக காந்தியின் பிறந்த நாளை பள்ளிக் கல்வித்துறையின் மூலம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காந்தி ஜெயந்தி அன்று அவரது படம் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடரும்.

காலாண்டு தேர்வு அட்டவணைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மூன்றாண்டு காலம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்போது என்ன நிலை உள்ளதோ, அதுவே தொடரும்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவுகளை முதல்வர் தான் மேற்கொள்ள வேண்டும்," என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதலே பொதுத்தேர்வு நடக்கும் எனவும், ஆனால், 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் அல்லாமல் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுவர் என, அமைச்சர் செங்கோட்டையன் விளக்கியுள்ளார்.

கோவிந்தராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x