Published : 17 Sep 2019 12:44 PM
Last Updated : 17 Sep 2019 12:44 PM

எல்லாவற்றிலும் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி

எல்லாவற்றிலும் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்துப் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ''5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதன் காரணமாக, நம்முடைய இளம் பிள்ளைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். ஆகவே கல்வித்துறை அதிகாரிகளுடம் கலந்து பேச உள்ளோம். அவர்களுடன் கலந்து பேசி என்ன செய்யவேண்டும் என்று இறுதி முடிவு எடுப்போம்.

எல்லா விவகாரங்களிலும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தைப் பின்பற்றுகிறோமே தவிர 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகள் நமக்கு ஏற்ற முறையில்தான் நடைபெறுகின்றன. அதனால் தமிழ்நாட்டுடன் நம்மை ஒப்பிட முடியாது'' என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வும் நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இதற்கு நாடு முழுவதும் 24 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை அமல்படுத்தின. இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசும் முடிவு செய்தது. இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அறிவித்தார்.

இதற்கிடையே மத்திய அரசின் ஆணைப்படி, நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செப். 13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்தே விமர்சனம் எழுப்பப்படும் சூழலில் இந்தத் தேர்வுகள் சரியா என்பது குறித்துக் கடுமையான விவாதங்கள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x