Published : 17 Sep 2019 12:50 PM
Last Updated : 17 Sep 2019 12:50 PM

மரங்களை புண்படுத்தலாமா?

குறைந்து வரும் பசுமையை மீட்டெடுக்க அரசும், சமூக நல அமைப்புகளும் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகின்றன. மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான உலகை அளிக்க, இருக்கும் மரங்களைப் பாதுகாப்பதும், புதிதாக மரக்கன்றுகள் நட்டுப் பராமரிப்பதும் அவசியமாகும்.

நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் நகரில் இருந்து, உதகை செல்லும் சாலையின் இருபுறமும் பல வகையான மரங்கள் உள்ளன. 50 முதல் 100 வயதான, சுமார் 30 அடி முதல் 100 அடி உயரம் வரையிலான இந்த மரங்கள், காற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி வருகின்றன. ஆனால், இதையெல்லாம் உணராமல், மேட்டுப்பாளையம் முதல் கல்லார் வரையிலான சாலையோர மரங்களில், ஏராளமான விளம்பரத் தட்டிகள் மற்றும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை கவர்ந்து, தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் தனியார் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை, மரங்களின் மீது ஆணியடித்து, விளம்பரத் தட்டிகளை மாட்டியுள்ளன. இதனால் காயம்பட்ட மரங்களின் இயல்பான வளர்ச்சி தடைபட்டு, அதன் வாழ்நாள் குறைந்து, விரைவில் பட்டுப்போய் சாய்ந்து விடுகின்றன. இதைத் தடுத்து நிறுத்தி, மரங்களைப் பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரங்களை சேதமாக்கினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அண்மையில் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. அதேபோல, மேட்டுப்பாளையம் பகுதியிலும் மரங்களைப் பாதுகாக்க, கடும் நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

படம்: இரா.சரவணபாபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x