Published : 17 Sep 2019 11:31 AM
Last Updated : 17 Sep 2019 11:31 AM

அமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

மதுரை

இந்தி தொடர்பான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர், ''பிரதமர் மோடி தமிழ் மொழி குறித்தும் திருக்குறளின் பெருமைகள் பற்றியும் பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் திருக்குறளையும் புறநானூறையும் மேற்கோள் காட்டிப் பேசியதுண்டா?

உள்துறை அமைச்சரை ஒரு நிகழ்வுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே, அந்த நாளில் இந்தி மொழியைக் கொண்டாடுகிற நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தி மொழியைப் பேசுகின்ற மக்களைச் சந்திக்கும்போது தன் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறார். நமது இந்திய நாடு என்கிறார்.

ஜப்பானில் ஜப்பானிய மொழி தெரிந்தவர்களுக்குத்தான் மதிப்பு. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் ஜப்பான் மூலமாகவே எதையும் அறிந்துகொள்ள முடியும். ரஷ்யாவிலும் இதே போக்குதான் நிலவுகிறது. அமெரிக்காவில் லத்தீன் மொழி தெரிய வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் இந்தி மொழிக்கு இந்த நிலை இல்லை. மாநில மொழிகளுக்கு அந்தஸ்து இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தவரும் ஆங்கிலத்தைக் கற்பதோடு இந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அமித் ஷா. இதிலென்ன தவறு?'' என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் செல்லூர் ராஜு.

நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்திருந்தார்.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x