Published : 17 Sep 2019 11:19 AM
Last Updated : 17 Sep 2019 11:19 AM

எலும்புக் கூடாக சடலம் மீட்பு; 2 பேர் கைது: 6 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் கொன்று புதைப்பு 

கோவை

கோவை அருகே மாயமான நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை வேலந்தாவளம் சாலை குட்டி கவுண்டன் பதியை சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவர், கடந்த ஆறு மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை. இது தொடர்பாக, அவரது தாய் க.க.சாவடி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக, பேரூர் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான க.க.சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

அதில், மாயமான மாரிமுத்து கொலை செய்யப்பட்டதாகவும், சிறுமுகை அருகேயுள்ள பொகலூர் பகுதியில் அவரது சடலம் புதைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சரவணம்பட்டியைச் சேர்ந்த சுந்தர் என்ற சுந்தர்ராஜ் (45), முத்துவேல்(40), ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து, மாரிமுத்துவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து க.க.சாவடி காவல்துறையினர் சுந்தர்ராஜ், முத்துவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

க.க.சாவடி காவல்துறையினர் கூறும் போது,‘‘மாரிமுத்து கிடைக்கும் வேலையை செய்து வந்தாலும், இரிடியம் விற்பனை உள்ளிட்ட சிலவற்றிலும் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மாரிமுத்துவும், அவரது நண்பர்களும் பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர். தவிர, பிரபல ரவுடி ஒருவரிடமும் மாரிமுத்து வேலை செய்து வந்தார். இந்த சூழலில், ஒரு விவகாரத்தில் மாரிமுத்துவுக்கு குறிப்பிட்ட லட்சம் அளவிலான தொகை கிடைத்தது. அந்த தொகையை பங்கிடுவதில், அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை பழிவாங்க திட்டமிட்ட சுந்தர்ராஜ், முத்துவேல் உள்ளிட்ட அவரது நண்பர்கள், 6 மாதங்களுக்கு முன்பு, மாரிமுத்துவை ஒத்தக்கால் மண்டபத்தில் இருந்து, சிறுமுகை அருகேயுள்ள பொகலூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களது மற்றொறு நண்பர் வீடு உள்ளது. பொகலூரில் மது அருந்தியுள்ளனர். பின்னர், சுந்தர்ராஜ், முத்துவேல் உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்து, மாரிமுத்துவை பணத்தை கேட்டு மரக்கட்டையால் சரமாரியாக அடித்தும், மோட்டார் தண்ணீரை முகத்தில் அடித்தும் கேட்டுள்ளனர். மாரிமுத்து உயிரிழந்தார். உயிரிழந்த அவரை, அங்கேயே குழி தோண்டி புதைத்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும், சிலரை தேடி வருகிறோம். பொகலூரில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாரிமுத்துவின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது,’’என்றனர்.

பிடிபட்டது எப்படி?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் மோதல் தொடர்பாக சுந்தர்ராஜ் உள்ளிட்ட 2 பேரை சரவணம்பட்டி காவல்துறை யினர் கைது செய்தனர். சுந்தர்ராஜின் செல்போனில், சிலர் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடுவது போல் இருந்த புகைப்படங்கள் அந்த சமயத்தில் வெளியாகின. கத்தியுடன் கேக் வெட்டிய சம்பவம் தொடர்பாக 6 பேரை சரவணம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது, சிறையில் அடைக்கப்பட்ட சுந்தர்ராஜ், ‘கொலை வழக்கில் தப்பிய நான்,’ இதில் மாட்டிக் கொண்டேன் என சக கைதிகளிடம் புலம்பியுள்ளார். இதை உளவாளி மூலம் கண்டறிந்த சரவணம்பட்டி காவல்துறையினர் சுந்தர்ராஜிடமும், அவர் அளித்த தகவலின் பேரில் முத்துவேலையும் பிடித்தும் விசாரித்தனர். பின்னர் க.க.சாவடி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x