

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 25 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் நேற்று கல்லூரி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
தொழுதூர் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 மாணவிகள் படுகாயமடைந்தனர். பேருந்து கவிழ்ந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவிகளை மீட்டு அருகில் உள்ள தொழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து சிலர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ராமநத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காயமடைந்த 25 மாணவிகளில் ஒருவரான கார்மாங்குடி மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (20) என்பவர் 8 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.