

சென்னை: பல்லாவரத்தை சேர்ந்தவர் காயத்ரி. மதுரையில் இருந்து சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸில் நேற்று காலை வந்த இவர், தாம்பரத்தில் இறங்கினார். ரூ.3 லட்சம் மதிப்புடைய நகைகள் அடங்கிய தனது பையை ரயிலில் தவறவிட்டதை அறிந்தார். உடனே ரயில்வே போலீஸின் அவசர உதவி எண் 182-ஐ தொடர்பு கொண்டு, விவரம் தெரிவித்தார். அவர் பயணித்த பெட்டி, இருக்கை எண் உள்ளிட்ட தகவல்களை ரயில்வே போலீஸார் கேட்டுக் கொண்டனர். எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நெல்லை எக்ஸ்பிரஸ் நுழையும்போதே, அந்த பெட்டி அருகே தயாராக இருந்த ரயில்வே போலீஸார், நகைப் பையை மீட்டனர். காயத்ரியை எழும்பூருக்கு வரவழைத்து பையை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். ரயில்வே போலீஸாருக்கு காயத்ரி கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.