

தஞ்சாவூர்
அமமுக என்னுடைய கட்சி என்று அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
அமமுகவின் செய்தித் தொடர்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். அதில் அமமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியின் பெயர் இடம் பெறவில்லை. இது அமமுக வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''எந்தக் காலகட்டத்திலும் எதையும் யாரையும் நம்பி இல்லை. கொண்ட கொள்கையை நம்பி இருக்கிறேன். சிறைக்கு எதற்காக சசிகலா சென்றாரோ, அந்தக் கொள்கை என்னோடு நிற்கும். எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
என் மீது யார் நடவடிக்கை எடுக்க முடியும்? கட்சியே என்னுடைய கட்சி. இந்தக் கட்சியைத் துவங்க நானும் ஓர் ஆளாக இருந்தேன். என் மீது எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள்? பார்ப்போம், பிறகு நான் என்ன செய்கிறேன் என்று.
அமமுக எனக்குச் சொந்தமான கட்சி. ஆகவே யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்'' என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னால், கோவையில் புகழேந்தி பேசிய வீடியோ வைரலானது. அதில், ''முகவரி இல்லாமல் 14 வருடங்கள் வெளியே இருந்த டிடிவி தினகரனை ஊருக்குக் காண்பித்தது புகழேந்திதான். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் ஜெயலலிதா இறக்கும்போது கூட தினகரன் கிடையாது. நாம்தான் போராட்டங்களை மேற்கொண்டுதான் அவரை வெளியே காண்பித்தோம்'' என்று தெரிவித்திருந்தார்.
இதனால் கட்சித் தலைமைக்கும் அவருக்கும் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.