Published : 16 Sep 2019 05:40 PM
Last Updated : 16 Sep 2019 05:40 PM

தமிழ் தொன்மையானது என்றால் தமிழர்கள் எப்படி நன்றி மறந்தவர்களாவர்? - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை

தமிழ் தொன்மையான மொழி என்றால், தமிழர்கள் எப்படி நன்றி மறந்தவர்களாக இருப்பார்கள் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (செப்.16) செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழ்மொழி மிகமிகப் பழமையான மொழி. இந்த வார்த்தையை எந்த பிரதமரும் சொன்னது கிடையது. மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி எந்த பிரதமரும் சொன்னது கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஒரு படி மேலே சென்று, சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் மொழி என்றார். தமிழ் மீது உண்மையிலேயே நமக்கு பற்று இருக்கிறது என்று சொன்னால், இதனை நாம் ஒரு ஆண்டு முழுக்கக் கொண்டாடியிருக்க வேண்டும். அதை நாம் செய்யவில்லை. கொண்டாடத் தெரியாதவன் தமிழன். நன்றி மறந்தவன் தமிழன்,” என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழ் தொன்மையான மொழி என்றால், தமிழர்கள் எப்படி நன்றி மறந்தவர்களாக இருப்பார்கள்? தொன்மையான மொழிக்குச் சொந்தக்காரர்கள் நன்றியுடையவர்களாகத்தான் இருப்பார்கள். பிரதமர் மோடி வேறு நோக்கத்தில் சொல்கிறார். அதனை தமிழர்கள் புரிந்துகொண்டிருக்கிற காரணத்தால், மோடியின் கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை," என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x