காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.5 பரிசு: உதகை ஆட்சியர் அறிவிப்பு
உதகை
உதகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தாவரவியல் பூங்கா மற்றும் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறு சுழற்சி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் ஒரு காலி பாட்டிலுக்கு ரூ.5 வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு உள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் விதத்தில், நீலகிரி மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு, கெத்தை உள்பட அனைத்து சோதனைச்சாவடிகள் முதல் உதகை வரையிலான நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டில்கள் மற்றும் கேன்களை குடிநீர் பாட்டில்களுக்கு மாற்றுப்பொருளாகப் பயன்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் பெற ஏதுவாக மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்கள் என 70 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மறுசுழற்சி இயந்திரங்கள்
இந்நிலையில், அடுத்தகட்டமாக உதகையில் 5 இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறு சுழற்சி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள உதகை தாவரவியல் பூங்கா மற்றும் பேருந்து நிலையம், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இந்த மறு சுழற்சி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
அவர் கூறும் போது, ''இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரத்திற்குள் பிளாஸ்டிக் பாட்டிலை செலுத்தும் போது அந்த பாட்டில் சிறு, சிறு துகள்களாக மாற்றப்பட்டு அழிக்கப்படுகிறது. முதற்கட்டமாக பேடிஎம் வாடிக்கையாளர்கள் பாட்டிலை இயந்திரத்தினுள் போடும்போது தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போது அவர்களது கணக்கில் கிரிட் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
அதனைத் தொடர்ந்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 விதம் கேஷ்பேக் கிடைக்கும். அதற்கான தொழில்நுட்ப வசதிகள், இயந்திரங்களில் செய்யபட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மாவட்டத்தின் முக்கிய நுழைவாயில்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
