Published : 16 Sep 2019 04:11 PM
Last Updated : 16 Sep 2019 04:11 PM

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை மக்களுடன் முற்றுகையிட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏ: தொகுதி புறக்கணிக்கப்படுவதாக புகார்

எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள்

புதுச்சேரி

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவகத்தை மக்களுடன் ஆளுங்கட்சி எம்எல்ஏ முற்றுகையிட்டார். தொகுதி புறக்கணிப்படுவதாக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி ஊசுடு தொகுதி ராமநாதபுரம் கிராமத்தில் ஜிப்மரின் கிராமப்புற கிளை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை ஒட்டியுள்ள கழிவுநீர் வாய்க்கால் சரி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் அனைத்தும் சாலையில் ஓடுகிறது.

இந்நிலையில் அப்பகுதிக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தீப்பாய்ந்தான் சென்றபோது, அங்குள்ள மக்கள், "எங்கள் பகுதியை புறக்கணிக்கின்றீர்களா?," என்று கேள்வி எழுப்பினர். அப்போது, "எனக்கு அனைத்துப் பகுதியும் ஒன்றுதான், நான் எந்தப் பகுதியையும் புறக்கணிக்கவில்லை. நான் தெரிவித்தும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை, எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்று கேட்போம்," என்று அப்பகுதி மக்களை அழைத்தார்.

அவர்களும் ஒத்துக்கொண்டதையடுத்து இன்று (செப்.16) தீப்பாய்ந்தான் தலைமையில் ஊசுடு தொகுதி மக்கள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து, அவரை சந்தித்து தீப்பாய்ந்தான் எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எம்எல்ஏ முன்னிலையில் அப்பகுதியை ஆய்வு செய்து பணியை முடித்துத்தருவதாக தலைமை பொறியாளர் உறுதியளித்தார்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட தீப்பாய்ந்தான் எம்எல்ஏ கூறுகையில், "எனது தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதற்காக நிதியைக்கூட ஒதுக்கவில்லை. என்னுடைய தொகுதியை அரசு புறக்கணிக்கிறது" என்று தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x