Published : 16 Sep 2019 01:40 PM
Last Updated : 16 Sep 2019 01:40 PM

 சட்டவிரோத பேனர், பிளக்ஸ்  இனி கிடையாது : உயர் நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

சுபஸ்ரீ மரணத்தை அடுத்து எழுந்த பேனர்களுக்கு எதிரான எழுச்சியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் பேனர் வைக்கமாட்டோம் என அறிவித்துள்ள நிலையில் அதற்கும் ஒருபடி மேலேச்சென்று திமுக உயர் நீதிமன்றத்தில் சட்டவிரோத பேனர் இனி இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 12-ம் தேதி பள்ளிக்கரணை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

மறுநாள் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் வழக்கறிஞர்கள் லக்‌ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் வைத்த முறையீட்டை விசாரித்தனர். அதனுடன் விதிமீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்து பேனர் வைக்க கூடாது என கட்சி தலைவர்கள் அறிவித்தால் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்க கூடாது என அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களின் இந்த அறிவிப்பை பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய விரும்பினால் தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி அமர்வு அறிவுறுத்தினர்.

பின்னர் விதிமீறல் பேனரை தடுக்காத அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், சுபஸ்ரீ குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு அவை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கை செப்டம்பர் 25-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரத்தை அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், 2017 ஜனவரி 29ஆம் தேதி திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அல்லது பிற நிகழ்சிகளுக்கு சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் வைக்க கூடாது என எச்சரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பின்னர், 2018-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், ஆர்வமிகுதியால் சிலர் பேனர் வைப்பது தொடர்வதாகவும், அதையும் தவிர்க்க அறிவுத்தபட்டுள்ளதாகவும் பிராமணபத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு செப்டம்பர் 13-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, 2017-ம் ஆண்டு கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வந்த முதல்வர், அமைச்சர்களை வரவேற்று வைக்கப்பட்ட வளைவு விழுந்ததில் லாரியில் அடிபட்டு பொறியாளர் ரகு இறந்தபோது, விதிமீறல் பேனர்களை தடுக்க கோரி திமுக எம்எல்ஏ கார்த்தி வழக்கு தொடர்ந்ததையும், அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திமுக கடைபிடித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு ஆகியவற்றை கட்டுப்படுத்த திமுக எடுக்கும் நடவடிக்கைகளை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இந்த பிராமண பத்திரம் தாக்க செய்யப்படுவதாகவும், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதித்து செயல்படும் என்றும் திமுக-வின் பிராமண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோத பேனருக்கு எதிராக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள ஒரே கட்சி திமுக என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x