Published : 16 Sep 2019 01:43 PM
Last Updated : 16 Sep 2019 01:43 PM

அரசுக்கு எதிராக மொழி உணர்வைத் தூண்டும் ஸ்டாலின்: எச்.ராஜா குற்றச்சாட்டு

கன்னியாகுமரி

மத்திய அரசுக்கு எதிராக மொழி உணர்வை ஸ்டாலின் தூண்டுகிறார் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்புக்கான எந்த முயற்சியையும் தடுக்க, எந்த தியாகத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதை அடுத்து எச்.ராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ''இந்த நாட்டின் ஒருமைப்பாட்டு அம்சங்களை யார் வலியுறுத்திப் பேசினாலும் அதைத் திரித்துக் கூறி, பிரிவினைவாதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற தீய நோக்கம் கொண்ட ஒரு கும்பல் இதற்கு எதிராகப் பேசியிருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதில் இந்தித் திணிப்பு எங்குள்ளது? மத்திய அரசுக்கு எதிராக மொழி உணர்வைத் தூண்டும் ஸ்டாலின், தனது குடும்பத்தினர் நடத்தும் 43 சிபிஎஸ்இ பள்ளிகளில் சமச்சீர் கல்வியைக் கொண்டு வராதது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார் எச்.ராஜா.

முன்னதாக நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் இந்தி மொழி பேசுபவர்கள் மட்டும் வாழவில்லை. 1,652 மொழிகளை பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர். நாடு முழுவதும் ஒரு மொழி என்று இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவது என்பது, இந்தியா முழுமைக்கும் இந்தியை திணிக்கத்தான்.

இன்றைக்கு இந்தியை திணிக்க சட்டம் போடுவார்கள், நாளைக்கு தமிழை படிக்கக்கூடாது என்று சட்டம் போடுவார்கள். இது கலாச்சார படையெடுப்பு என்று பெரியார் சொன்னார். இந்தி பேசுபவர்களின் நாகரீகம் வேறு, நம்முடைய நாகரீகம் வேறு என்றார். கலாச்சார படையெடுப்பை தடுக்க திமுக தயாராக இருக்க வேண்டும்.

இந்தி திணிப்பை வேடிக்கை பார்க்க மாட்டோம். அதை தடுக்கும் முயற்சியில் உறுதியாக ஈடுபடு வோம். அதற்காக எந்த தியாகத்துக்கும் நாங்கள் செல்ல தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x