Published : 16 Sep 2019 01:13 PM
Last Updated : 16 Sep 2019 01:13 PM

திராவிட இயக்க தலைவர்கள் உருவாக்கிய இந்தி எதிர்ப்பு போராட்ட உணர்வு மங்கி போகவில்லை: திருவண்ணாமலையில் கனிமொழி ஆவேசம்

திருவண்ணாமலை

திராவிட இயக்கத் தலைவர்கள் உருவாக்கிய இந்தி எதிர்ப்பு என்ற போராட்ட உணர்வு மங்கிப் போகவில்லை என்று கனிமொழி எம்பி பேசினார்.

திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் ‘திராவிடத்தின் திருவிளக்கு’ என்ற தலைப்பில் கவியரங்கை தொடங்கி வைத்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இந்திய நாடு சந்தித்து வரும் சவால்களை, நாம் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் நின்று விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மொழி, மானம் காக்கப்பட வேண்டும்.

தமிழரின் மானம், சுய மரியாதை மற்றும் சமூக நீதியை உயிர் துடிப்பாக வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்தான் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி. அந்த தலைவரின் மனதில் ஏந்திய தீ என்பது ஈரோட்டில் பற்ற வைக்கப்பட்ட பெரியார் என்ற கொள்கை ஏற்றிய தீ, அணையாத விளக்காக அண்ணாதுரை மாற்றி அமைத்த தீயை, நம்மிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார் கருணாநிதி. அந்த தீயை தாங்கி பிடிக்கும் தீபமாக, விளக்காக திமுக தலைவர் ஸ்டாலின் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தி தினம் என்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் ‘இந்தி’ தான் இந்த நாட்டை ஒன்றிணைக்கும் வலிமை உள்ள ஒரே மொழி என்ற ஒற்றை கருத்தை முன் வைக்கிறார். நான் அவருக்கு, இந்த மேடையில் இருந்து சொல்ல விரும்புவது, தயவு செய்து சரித்திர பக்கங்களை திரும்பிப் பாருங்கள். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சென்றதற்கு காரணமாக இருந்தது மொழி என்ற பிரச்சினைதான். அதுபோல, தமிழகத்தில் தீப்பற்றி எரியக் கூடிய விதத்தில் உருவான பிரச்சினை என்பது இந்தி எதிர்ப்பு. 1930-ல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்கான களமாக மாற்றி அமைத்த பெருமை திராவிட இயக்கத்துக்கும் திராவிட இயக்க தலைவர்களுக்கும் உண்டு. அந்த உணர்வு இன்று வரை மங்கிப் போகவில்லை.

நீங்கள், ஒரு மொழி ஒரு மதம் என்று கொண்டு வந்து, இந்த நாட்டை இணைத்து விடலாம் என்று கனவு கொண்டிருக்கிறீர்களோ, அதுவே, இந்த நாட்டை பிரிக்கக்கூடிய ஒன்றாக மாறும். உங்களை பதவியில் இருந்து இறக்கக் கூடிய நாள், வெகு தொலைவில் இல்லை. பலமுறை, பல விதங்களில், ஆட்சியில் இருப்பவர்கள், இந்தியை திணிக்கக்கூடிய எத்தனையோ முயற்சிகளை கையாண்டுள்ளனர். அத்தனையையும் தனது போராட்டத்தால் ஸ்டாலின் தூக்கி எறிந்துள்ளார். இந்த போராட்டம் என்பது கடைசி தமிழன், கடைசி தமிழச்சி இந்த மண்ணில் இருக்கும் வரை ஓயாது. அது உங்களுக்கு பெரிய சவாலாக அமையும்” என்றார்.

முன்னதாக, அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x