Published : 16 Sep 2019 12:49 PM
Last Updated : 16 Sep 2019 12:49 PM

ஸ்ரீபெரும்புதூரில் பராமரிப்பின்றி விடப்பட்ட அண்ணா சிலை: சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலையா என மக்கள் வேதனை

பெ.ஜேம்ஸ்குமார்

ஸ்ரீபெரும்புதூர்

அண்ணா பிறந்த மாவட்டத்தில் அவரது சிலையை அரசியல் கட்சியினரும் மாவட்ட நிர்வாகமும் புறக்கணித்த சம்பவம் பொது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான பேரறிஞர் அண்ணா, காஞ்சி மாவட்டத்தில் பிறந்து, தமிழகத்தின் முதல்வரானவர். அவரது பெருமையை பறைசாற்றும் வகையில் பெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தில், 2011-ம் ஆண்டில் திமுகவினரால் அண்ணாவின் சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் இச்சிலையை திறந்து வைத்தார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்தச் சிலை பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் உள்ளது. நேற்று அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, மாலை கூட அணிவிக்கப்படாமல், திமுக, அதிமுக என இரு கட்சிகளும் அலட்சியம் காட்டின. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

அண்ணாவின் பெயரையே கட்சியின் பெயரில் சேர்த்துள்ள அதிமுகவும், அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவும் தற்போது அவருடைய சிலைக்கு மாலை கூட அணிவிக்க மனமில்லாமல் இருப்பது வருந்தத்தக்கது. அண்ணாவை இவர்கள் மறந்ததை, ஜீரணிக்க முடியவில்லை; இதை அவமரியாதையாகக் கருதுகிறோம். மேலும், சிமென்டால் வடிவமைக்கப்பட்ட அண்ணாவின் உருவச்சிலை 8 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பூச்சுகள் உதிர்ந்து, இரு கைகள் உடைந்தும் காணப்படுகிறது. அண்ணாவைக் கொண்டாடும் கட்சிகள் அவர் சிலையைக் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டும்.

அண்ணாவை மறந்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என தெரிந்தும், அவரது சிலையைப் பராமரிக்க மறந்து விட்டனர். இது தானாகவே அவர்களின் மனதில் உதித்திருக்க வேண்டும். மேலும் அண்ணா தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர். இந்த காஞ்சி மாவட்டத்தில் பிறந்தவர். அப்படி இருக்க ஏன் அரசு அதிகாரிகள் கூட அவரது சிலையை பராமரிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x