Published : 16 Sep 2019 12:52 PM
Last Updated : 16 Sep 2019 12:52 PM

அரசாட்சி மக்களுக்கு அளித்த சத்தியத்தை எந்த 'ஷா'வும் மாற்ற முயற்சிக்கக் கூடாது: கமல் கருத்து

சென்னை

இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கிய மொழி, கலாச்சார சுதந்திரத்தை எந்த ஷாவும், சுல்தானும், சாம்ராட்டும் மாற்ற முயற்சிக்கக் கூடாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், "பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான்.

1950 இல் இந்தியா குடியரசானபோது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி.

எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகளில் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!" எனப் பேசியிருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை அடங்கிய புகைப்படத்தைக் கையில் ஏந்தியவாறு கமல் பேசியிருக்கிறார்.

— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x