Published : 16 Sep 2019 11:22 AM
Last Updated : 16 Sep 2019 11:22 AM

‘பேனர் கலாச்சாரம் ஒழியாவிட்டால் மக்களே ஒழிப்பார்கள்’ : சுபஸ்ரீ வீட்டில் கமல் பேட்டி

பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு கமல் ஆறுதல் தெரிவித்தார், பேனர் வைத்தவர்கள் போலீஸ் பிடியிலிருந்து நிறைய நாள் ஓடி தப்பித்துவிட முடியாது. தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 12-ம் தேதி பிளக்ஸ் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் இழப்பு காரணமாக பேனருக்கு எதிரான கடும் கண்டனம் எழுந்துள்ளது. உயிரிழந்த சுபஸ்ரீயின் இல்லத்திற்கு மக்கள் நீதிமய்யம் நிறுவனர் கமல் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“இந்த பெற்றோர்களின் இழப்புக்கு என்ன சொல்லப்போகிறேன் என்று தெரியவில்லை. சுபஸ்ரீயின் பெற்றோர்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லை. சோகம் என்பது கோபமாக மாறுவதற்கு ஏதுவாக யாரும் எதுவும் சொல்லவேண்டாம் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

குற்றம் எங்கள் மேல் இல்லை என சுட்டிக்காட்டுவதை மிகத்தீவிரமாக எடுக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் எதுவும் யாரும் பேச வேண்டாம். நானும் கிளறிவிட விரும்பவில்லை. தயவு செய்து அவர்கள் கொஞ்சம் மனம் தேறி வரட்டும்.
அதுவரை அவர்கள்மீது குற்றம் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால்கூட பரவாயில்லை, குறைந்தப்பட்சம் இறந்த பெண் குழந்தை மீது தப்பிருப்பதாக சொல்வது சரியில்லை. இனியாவது திருத்திக்கொள்ளுங்கள். சும்மா ஒருநாள் நீங்கள் நாடகம் போட்டு பேனரை ஒழிப்போம் என்று சொல்வது சரியாக இருக்காது. பேனர் கலாச்சாரத்தை நிரந்தரமாக ஒழிக்கவேண்டும், ஒழியவில்லை என்றால் மக்கள் ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் துணையாக இருக்கும்.

எங்கள் கட்சியிலிருந்து நாங்கள் செய்யவேண்டிய வேலை, பேனர்கள் வைக்காமல் இருப்பது முதல்பணி, பின்னர் மற்றவர்கள் வைப்பதை விமர்சிப்போம். சினிமா ரசிகர்களுக்கு ஒரு கட்டளையாகவே சொல்கிறேன் தயவு செய்து பேனர் வைப்பதை நிறுத்துங்கள். அது அன்புக்கட்டளை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.

பேனர் வைத்தவர்கள் போலீஸ் பிடியிலிருந்து அதிக நாள் ஓடி தப்பித்துவிட முடியாது. தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அனைத்துக் குற்றசாட்டிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் உள்ளது. அது தகர்க்கப்படவேண்டும்”.

இவ்வாறு கமல் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x