

சென்னை
தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா விருகம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
சென்னை மாநகரில் குடிநீர் பிரச்சினையை போக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பருவமழை பொய்த்தாலும் சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக பேரூரில் ரூ.6 ஆயிரத்து 78 கோடியில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த அரசு பல்வேறு சந்திப்புகளில் பாலங்களை கட்டி வருகிறது. கோயம்பேடு, பல்லாவரம், வேளச்சேரி, திருவொற்றியூர், மேடவாக்கம், வண்டலூரில் மேம்பாலப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகரில் எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. மத்திய கைலாஷ், பேசின் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக சென்னை மாநகரம் உருவாக்கப்படும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நான் வெளிநாடு செல்வதை குறை கூறுகிறார். தென் மாநில முதலமைச்சர் எல்லாம் அடிக்கடி வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்கும்போது, நாம் இங்கே இருந்தால் எந்த முதலீடும் தமிழ்நாட்டுக்கு வராது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது என்பதற்காகத்தான் நாம் வெளிநாடு சென்று வந்தோம் என்றார். இந்நிகழ்ச்சியில் விருகை ரவி எம்எல்ஏ, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.