

சென்னை
இரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட அண்ணா சாலையில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு வரை உள்ள சாலை கடந்த 11-ம் தேதி முதல் இருவழிப்பதையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் 12-ம் தேதி அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 9 மணிக்கு தொடங்கிய நெரிசல் மாலை 3 மணி வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து எல்ஐசி முதல் ஆயிரம்விளக்கு வரையுள்ள பகுதியில் அண்ணா சாலையுடன் இணையும் சாலைகளான ஜி.பி.ரோடு, ஒயிட்ஸ் ரோடு, உட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு, பீட்டர்ஸ் ரோடு ஆகிய சாலைகளில் ஒரு வழி மற்றும் இரு வழி பாதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் நெரிசல் ஓரளவு குறைந்தது.
எல்ஐசி முதல் ஆயிரம்விளக்கு வரையுள்ள அண்ணா சாலையில் தற்போது சென்டர் மீடியன், சாலை ஓரத்தில் நடந்து செல்பவர்களுக்கான இடவசதி, பேருந்து நிறுத்தத்துக்கான இடவசதி, நிழற்குடை போன்ற பணிகள் இன்னும் முழுமையடையாமல் உள்ளன. சாலையும் முறையாக போடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இந்த பகுதிகளில் சிக்னல்கள் முழுமையாக இயங்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். சிக்னல் இயங்காத இடங்களில் போக்குவரத்து போலீஸாரே சாலையில் நின்று போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
எல்ஐசி, ஸ்பென்சர், டிவிஎஸ், ஆயிரம்விளக்கு, தாராப்பூர் டவர் உட்பட அண்ணா சாலையில் இருவழிச் சாலையாக மாற்றப்பட்ட எந்த இடத்திலும் சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால் ஒவ்வொரு சிக்னலிலும் போக்குவரத்து போலீஸார் நின்றுகொண்டு, போக்குவரத்தை முறைப்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே உள்ள சிக்னல்களில் உள்ள பழுதுகளை சரிசெய்து செயல்பட வைத்தால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீஸாருக்கும் சிரமங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.