‘சதுரங்கவேட்டை’ பட பாணியில் பண மோசடி: 6 பெண்களை மணந்து மோசடி செய்த போலி எஸ்.ஐ. கைது
சென்னை
சென்னையில் 6 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த போலி எஸ்.ஐ.யை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் இந்த மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமாகி உள்ளது. சென்னை எழும்பூரில் வசித்து வந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் 30-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில், கவிதா வேலை செய்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திருப்பூர், நொச்சிபாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்வி ( வயது 29) கவிதாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருப்பூர் சென்ற போலீஸார் கவிதாவை மீட்டனர். ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர்.
இதுகுறித்து எழும்பூர் போலீஸார் கூறியதாவது:
சிறையில் அடைக்கப்பட்ட ராஜேஷ் பிரித்வி போலியான நிறுவனத்தை நடத்தி மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்து ஏமாற்றியுள்ளார். அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தன்னை காவல் உதவி ஆய்வாளர் என்று அறிமுகப்படுத்தி பலரிடம் மோசடி செய்துள்ளார்.
மேலும், இவர் தனது பெயரை தினேஷ், ஸ்ரீராமகுரு, தீனதயாளன், ராஜேஷ் பிரித்வி என்று மாற்றி 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். இவர் மீது திருச்சி, கோவை, திருப்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி ஆகிய காவல் நிலையங்களில் பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவருடைய அலுவலகத்தில் இருந்து போலீஸ் எஸ்ஐ சீருடை, போலி அடையாள அட்டை, போலி ஆதார் அட்டை, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கைவிலங்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் பலரிடம் பண மோசடியும் செய்துள்ளார். இந்த பணத்தில் ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
