

திருத்தணி
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. வரும் காலங்களில் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு திட்டமாக சிறிய ஓடைகள் மற்றும் ஆயகட்டுப் பகுதிகளில் இருந்து, கொசஸ்தலை ஆற்றுக்குச் செல்லும் கால்வாய் பகுதிகளில் மழைநீரை மீள்நிரப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பு, பொதுமக்களின் பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மழைநீர் மீள்நிரப்பு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில், திருத்தணி அருகே தாடூர் ஊராட்சியில், கொசஸ்தலை ஆற்றுக்குச் செல்லும் கால்வாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீள்நிரப்பு கிணற்றை நேற்று வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வின்போது ஆட்சியர் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், தொழில்நுட்ப உதவியுடன், தொலை உணர்வு திறன் தரவுகளின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகளில் மீள்நிரப்பு கிணறுகள் அமைக்கலாம் என்பது கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் மீள்நிரப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆற்றுக்கு அருகே போல்டர் தடுப்பணை அமைக்கப்பட்டு, அதிலிருந்து 20 மீட்டர் தொலைவில் இந்த மீள்நிரப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.