Published : 16 Sep 2019 08:21 AM
Last Updated : 16 Sep 2019 08:21 AM

ஒரே நேரத்தில் ஒரே தடத்தில் அடுத்தடுத்து வரும் பேருந்துகள்: சீரான இடைவெளியில் இயக்க பயணிகள் கோரிக்கை

சென்னை

சென்னையில் ஒரே நேரத்தில் ஒரே தடத்தில் அடுத்தடுத்து பேருந்துகள் செல்வது அடிக்கடி நிகழ்கிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சீரான இடைவெளியில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 833 வழித்தடங்களில் 3,688 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. புறநகரில் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால், மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில் உள்ள குறைபாடுகளால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, மாநகர பேருந்துகள் சீரான இடைவெளியில் இயக்கப்படுவதில்லை. சில நேரங்களில் ஒரே நேரத்தில் ஒரே தடத்தில் பேருந்துகள் வரிசையாகச் செல்கின்றன. அதன்பிறகு, பேருந்து வசதியின்றி, பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 54, 18கே, 27பி, 27டி, 2ஏ, 45பி, 29சி உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த நிலை நீடிக்கிறது.

பல்வேறு இடங்களில் பணிக்கு செல்லும் மக்கள், தங்களது பணியை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்ல இரவு 10 முதல் 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. ஆனால், இரவு 9.30 மணிக்கு பிறகு, பேருந்துகளின் இயக்கத்தை படிப்படியாக குறைத்து விடுகின்றனர். அதாவது, தேவைக்கும் குறைவாக பேருந்துகள் இயக்கப்படு கின்றன. சில நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில்கூட நிற்காமல் வேகமாக ஓட்டிச் செல்கின்றனர். இதனால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:

சென்னையில் சில வழித்தடங்களில் ஒரே தடத்தில், ஒரே நேரத்தில் வரிசையாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதற்குப் பிறகு சுமார் 1 மணி நேரத்துக்கு பேருந்தே வருவதில்லை. முன்பெல்லாம் குறிப்பிட்ட நிறுத்தத்தில், குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் வந்து செல்லும். ஆனால் இப்போது அந்த நேரத்தைக் கடைபிடிப்பதே இல்லை. எப்பொழுது பேருந்து வரும் என்று யாருக்கும் தெரிவதில்லை. இதனால் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அடுத்தடுத்து வருவதால் பயணிகள் கூட்டமின்றி பேருந்துகள் காலியாகச் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நிர்வாகத்துக்குத்தான் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே சீரான இடைவெளியில் மாநகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x