Published : 16 Sep 2019 07:08 AM
Last Updated : 16 Sep 2019 07:08 AM

7-ம் ஆண்டில் ’இந்து தமிழ் திசை’: வாருங்கள்.. வாசிப்பின் நேசம் வளர்ப்போம்!

அன்பிற்கினிய வாசகர்களே...

ஏழாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது உங்கள் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ்.

நாம் பிறந்த நோக்கத்தை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்வதன் வாயிலாகவும், நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதன் வாயிலாகவும்தான் பிறந்தநாள் தருணம் என்பது அர்த்தம் பெறுகிறது.

ஆறாண்டுகளுக்கு முன்பு, என்னென்ன கனவுகளுடன், லட்சியங்களுடன் களம் இறங்கினோமோ, அவை ஒவ்வொன்றிலும் எங்களை முழு மனதோடு ஈடுபடுத்திக் கொண்டதுடன், வாசகர்களாகிய நீங்கள் சுட்டிக்காட்டிய செயல்பாடுகளிலும் எங்களைக் களமிறக்கிக் கொண்டோம். நாளுக்கு நாள் களங்களின் எண்ணிக்கை கூடுவதோடு, எங்கள் மீதான உங்கள் எதிர்பார்ப்பும், அன்பும் அதிகரித்துக்கொண்டே போவதை உணர்ந்திருக்கிறோம். விளைவாக, எங்கள் பொறுப்பும் கூடுகிறது.

தொடங்கப்பட்ட நாள் முதலாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அம்சம் நோக்கி கவனம் குவிப்பதையும், அந்த ஆண்டு முழுவதிலும் அந்த அம்சத்துக்கு கூடுதல் இடம் கொடுத்து விவாதிப்பதையும் தனது கடமைகளில் ஒன்றாகக் கருதி வருகிறது ‘இந்து தமிழ் திசை'.

அப்படித்தான் இளைஞர்களை ஆரோக்கியமான முறையில் அரசியல்மயப்படுத்தும் வகையில், ஜனநாயகத் திருவிழாக்களின் முக்கியத்துவத்தைப் பேசினோம். மக்களவைத் தேர்தல் முதல், உள்ளாட்சித் தேர்தல் வரை ஒவ்வொன்றிலும் மக்களின் பங்கேற்பை தொடர்ந்து வலியுறுத்தினோம். அரசுப் பள்ளிகளின் மேன்மைகளையும், அதன் முக்கியத்துவங்களையும், அங்கிருந்து உருவாகிவந்த முன்னுதாரணங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தோம். மதுவின் கொடுமைகளை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தினோம். ஆறுகள் சூறையாடப்படுவதை மக்கள் அரங்கத்தில் வெளிச்சமிட்டோம். அதீத இணையப் பயன்பாடும், கட்டற்று செல்பேசியில் மூழ்கிடும் கலாச்சாரமும் நம் காலத்தின் பெரும் மானுடச் சீரழிவாக மாறிக்கொண்டிருப்பதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவந்தோம்.

இவ்வளவும் வாசகர்களாகிய நீங்கள் எங்களுக்கு இட்ட வழிகாட்டுதல் உத்தரவுகள்தான்!

இதோ, இன்று பிறக்கும் ஏழாம் ஆண்டில் நாங்கள் முன்னெடுக்கப்போகும் விஷயம் என்ன? ஓரிரு வாரங்களாகவே ஏராளமான கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன. ஆச்சரியமூட்டும் வகையில், அவற்றில் பெரும்பாலான கடிதங்கள் ஒரே விஷயத்தைச் சுட்டிக்காட்டின. இளைய தலைமுறையிடம் வாசிப்பை வளர்த்தெடுக்க ஓர் அறிவு இயக்கத்தை ‘இந்து தமிழ் திசை’ தொடங்கி நடத்த வேண்டும் என்பதே அது.

தமிழ் மக்களிடையே வாசிப்புக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க இந்த ஆறு ஆண்டுகளில், எத்தனை வழிகளில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் பயணித்துவருகிறது என்பது வாசகர்கள் அறியாதது அல்ல. உலகெங்கிலும் வெளியாகும் முக்கியமான புத்தகங்களை, முக்கியமான எழுத்தாளர்களை, முக்கியமான சிந்தனைகளை பத்திரிகையின் வழியே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஆரோக்கியமான விவாதங்களை வளர்த்து வருகிறோம். புத்தகக் காட்சிகள் எங்கு நடந்தாலும் அதுகுறித்து வாசகர்களுக்கு முழுமையான தகவல்கள் தந்து அங்கெல்லாம் குவியச் செய்கிறோம். சிறுவர்கள், இளையோர் மத்தியில் வாசிப்பின் சுகத்தை பரவச் செய்வதற்காகவே தனித்தனி இணைப்பிதழ்களை நடத்தி வருகிறோம்.

இதெல்லாம் தாண்டி, மாணவ சமுதாயம் நோக்கி நம் அத்தனை பேரின் கவனமும் குவிய வேண்டிய நேரம் இது என்று வாசகர்களும், ஆசிரிய சமுதாயமும் ‘இந்து தமிழ் திசை’ குழுவினரை நோக்கி குரல் கொடுத்துள்ளனர்.

எப்படிச் செய்வது அதை?

செல்பேசிகளின் பயன்பாடு இன்று காணொளி மோகத்தோடு கைகளில் விரிந்திருக்க, வாசிப்பின் வழி கிடைக்கும் ஆழ்ந்த ஞானத்தை விரிவு செய்துகொள்வதற்கான நேரம் குறுகிக்கொண்டே போவதை, அறிவுள்ள எவரும் அதிர்ச்சியுடனே பார்க்கிறார்கள்.

இத்தருணத்தில், பள்ளிக்கூடங்களில் படிக்கும் பாடப் புத்தகங்களை நேசிக்கும் அதே அளவுக்கு, உலக அறிவை ஊட்டும் பொதுவான வாசிப்பையும் மாணவர்கள் மத்தியில் கூட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அனைத்தையும் செய்வதற்குத் தயாராகி வருகிறது நமது குழு. ஏழாம் ஆண்டில் அதன் பிரதிபலிப்பை நீங்கள் அடுத்தடுத்துப் பார்க்கத்தான் போகிறீர்கள். அடுத்த தலைமுறையையும் வாசிப்பின் நேசர்களாக மாற்றும் புதிய முயற்சிகளில் பெற்றோரும், ஆசிரியர்களும் எங்களுடன் உற்சாகமாகக் கைகோக்கத்தான் போகிறீர்கள்.

முன்கூட்டியே உங்கள் வாழ்த்துக்களை வேண்டி நிற்கிறோம். என்றும் இணைந்திருப்போம், திறமிகு தமிழால்!

அன்புடன்..
கே.அசோகன்,
ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x