Published : 15 Sep 2019 04:05 PM
Last Updated : 15 Sep 2019 04:05 PM

அறிவியல் பூர்வமற்ற பொதுத்தேர்வை கைவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழக பள்ளிக் கல்வித்துறை, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக பள்ளிக் கல்வித்துறை, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகும். இத்திட்டம் ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமையை தட்டிப் பறிப்பதாக அமைந்துவிடும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

குழந்தைகளின் நலன் கருதி பல்வேறு விவாதங்களுக்கு பிறகு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. குழந்தைகள் அச்சம், அதிர்ச்சி, பதட்டம் ஆகியவை இல்லாமல் தங்களை மிக இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ள உதவுவதே கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம். அத்தகைய நோக்கத்தின் அடிப்படையில்தான் எட்டாம் வகுப்பு முடியும் வரை பொதுத்தேர்வு கூடாது என்று அறிவிக்கப்பட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 29(2)(g) மற்றும் பிரிவு 30(1) மிக தெளிவாக இதை விளக்குகிறது.

தேர்வு வைத்தால்தான் ஒரு குழந்தை பயிலும் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. அவ்வாறு எந்த ஆய்வும் கூறவில்லை. மாறாக, தேர்வு குழந்தைகள் இடைநிற்றலை அதிகரிக்கும் என்பதே அனுபவம். இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்துதான் தேர்வு முறை கைவிடப்பட்டது.

தற்போது மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு நடத்த வழி செய்துள்ளது. பிரிவு 16 திருத்தப்பட்டு "வழக்கமான தேர்வு" (Regular Exam) நடத்த கூறுகிறது. பிரிவு 30, எந்த குழந்தையும் 8ஆம் வகுப்பு முடியும் வரை வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறது.

தமிழக அரசு ‘வாரியத் தேர்விற்கும்', ‘வழக்கமான தேர்விற்கும்' உள்ள வேறுபாட்டை முதலில் தெளிவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பொதுத் தேர்வு நடத்தவும், தேர்வுக் கட்டணம், அதற்கான குழு அமைக்கவும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது நியாயமற்றது.

8ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவிலிருந்து அரசு மாற்று முடிவை எடுப்பதாக இருந்தால் வல்லுநர் குழு அமைத்து வெளிப்படையான விவாதம் நடத்தி அனைத்து தரப்பினர் கருத்தையும் கேட்டறிந்து உரிய முடிவுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இயக்குநர் கருத்துருவின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு என்பது மாணவர் நலன் சார்ந்தது அல்ல. மாணவர் கற்றல் திறனை அறிவதற்கு பல வழி முறைகள் உள்ளபோது தேர்வு ஒன்றே முடிவு என்பது நியாயமற்ற அணுகுமுறை.

உளவியல் மற்றும் சமூக உளவியல் தாக்கங்களினால் மாணவர் கல்வியின் மீது ஆர்வமிழப்பது, பள்ளியில் இருந்து விலகுவது அதிகரிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும் அளவு பாதிக்கப்படுவார்கள்.

எனவே, தமிழ்நாடு அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு என்று அறிவித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும். மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் இதில் கவனம் செலுத்தி பொது விசாரணை நடத்தி குழந்தை உரிமை காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கை அறிவித்து அதன் மீது நாடு முழுவதும் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வரைவு தேசிய கல்விக் கொள்கை அனைத்து தரப்பினராலும் மிகக் கடுமையான விமர்சனத்திற்குள்ளான அம்சங்களில் 3, 5 மற்றும் 8ஆம் வகுக்குப்பிற்கு பொதுத் தேர்வு என்பதும் ஒன்று. இந்த நிலையில் மத்திய அரசையும் முந்திக் கொண்டு தமிழக அரசு அதை அமல்படுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசின் இந்த நடவடிக்கை எதிர்த்து மாணவர் இயக்கங்கள், கல்வி ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு போராட்ட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x