

புதுடில்லி:
கோவை வடிவேலம்பாளையத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா பாராட்டு தெரிவித்தார்.
'தினக்கூலிகளுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லிகளை விற்கும் 80 வயது மூதாட்டியான வடிவேல்பாளையம் கமலாத்தாளின் புனித சேவைக்குத் தலைவணங்குகிறேன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிக்கிறது. என்னுடைய வணக்கங்கள்’ என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக விறகு அடுப்புப் புகையில் வாடி, இட்லி சமைத்து விற்பனை செய்த கமலாத்தாள் பாட்டிக்கு எல்பிஜி சமையல் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதானவர் கமலாத்தாள் பாட்டி. கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். வடிவேலம்பாளையம் பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் மிகவும் பிரபலம்.
25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
வெளியிடங்களில் உள்ள ஹோட்டல்களில் ஒரு இட்லி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் எளிய மக்கள் பசியாற வேண்டும் என்ற நோக்கில் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியும், மணக்கும் சாம்பார், சட்னி ஆகியவற்றை தனது கையால் சமைத்து விற்பனை செய்து வருகிறார்.
அதிகாலை 4 மணிக்கு எழும் கமலாத்தாள் பாட்டி தனது கூன்விழுந்த கழுத்துடன் தள்ளாத வயதிலும் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு இட்லி, சாம்பார், சட்னி வைக்கும் பணியையும் தொடங்குகிறார். நாள் ஒன்றுக்கு கமலாத்தாள் பாட்டி குறைந்தபட்சம் 600 இட்லிகள் வரை விற்பனை செய்து தனது காலத்தை ஓட்டி வருகிறார்.
இட்லிக்கு மாவு அரைக்க மட்டுமே கிரைண்டர் பயன்படுத்தும் கமலாத்தாள் பாட்டி, சட்னி அரைப்பதற்கு இன்னும் கல் உரலையே பயன்படுத்தி வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் சாம்பார், சட்னிக்காகவே காலை முதலே ஏராளமானோர் வந்துவிடுகின்றனர்.
மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், அரசு அலுவலகத்தில் பணி செய்வோர், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் என பலரும் கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் இட்லி, சட்னி, சாம்பாருக்காக காலை முதலே காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் கமலாத்தாள் பாட்டியின் தள்ளாத வயதிலும் தனி ஆளாக உழைத்து பிழைப்பு நடத்தி வரும் செய்தி தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் வந்தது. சமூக ஊடகங்களிலும் கமலாத்தாள் பாட்டி குறித்து செய்தி வைரலானது.
இந்நிலையில் இது துணைக்குடியரசுத் தலைவர் கவனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.