வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
Updated on
1 min read

கிழக்கு மத்திய வங்கக் கடலில், போர்ட் பிளேரிலிருந்து 490 கி.மீ. தூரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வங்கதேசம், மியான்மர் நாடுகளை சென்றடையும். இதனால், தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதே சமயத்தில் மழையும் கிடைக்காது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், குளச்சல், ராமேஸ்வரம், பாம்பன், பாண்டிச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 13 செ.மீ.,திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 10 செ.மீ., திருச்சி டவுன், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதுதவிர புதுக்கோட்டை, கோவை, சேலம், தருமபுரி, வேலூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 106.16 டிகிரி வெப்பம் பதிவாகியது. மதுரையில் 102.74 டிகிரி, சென்னையில் 101.84 டிகிரி, சேலத்தில் 100.76 டிகிரி, கடலூரில் 100.4 டிகிரி பதிவாகியது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 68.9 டிகிரி பதிவாகியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in