

சென்னை
அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பேனர்களை அகற்ற ரோந்து வாகனங்களை அமைத்து பொதுமக்கள் புகார் எண்ணையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிய சென்னை மாநகராட்சிக்கு அனுமதி இல்லாத பேனர் குறித்து புகார் அளித்தபோது 30 நிமிடங்களில் அகற்றினர்.
பள்ளிக்கரணை 200 அடிச்சாலையில் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்தார். இந்தப்பிரச்சினை பலத்த கண்டனத்தை எழுப்பியது. உயர் நீதிமன்றம் கண்டித்தது.
அரசியல் கட்சித்தலைவர்கள் பேனர் வைக்கமாட்டோம் என உறுதியளித்தனர். பேனர்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சியில் 5 மண்டலங்களுக்கு ஒரு ரோந்து வாகனம் காவல்துறை உதவியுடன் தனியான எண்ணில் இயங்கும் என மூன்று வட்டார அலுவலகங்களுக்கும் ரோந்து வாகனம் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்க தனி எண்கள் அளிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரோந்து வாகனத்தின் செயல்பாட்டை அறிய அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள சுரங்கப்பாதையின் கூரைமீது ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பரம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் சுபஸ்ரீ போன்று விபத்து நடக்க வாய்ப்பிருந்தது. இது குறித்து 1 முதல் 5 வரை உள்ள மண்டலங்களுக்காக அளிக்கப்பட்ட புகார் எண்ணில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் பதிவு செய்யப்பட்டது, பின்னர் 10 நிமிடம் கழித்து புகார் கூறியதை உறுதிப்படுத்த ஒரு அலுவலர் பேசினார். பின்னர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து போலீஸார் வந்தனர். அடுத்த 20 நிமிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேனரை அகற்றினர். அகற்றப்பட்டது குறித்து போன் செய்து புகாரளித்த நபருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மாநகராட்சி அறிவிப்போடு நின்றுவிடாமல் செயலிலும் இறங்கியதை பேனர் விவகாரத்தில் எடுத்த துரித நடவடிக்கையில் காண முடிந்தது.
இதேபோன்று சென்னை முழுதும் 15 மண்டலங்களிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற
1 முதல் 5 வது மண்டலம் வரை பொதுமக்கள் புகார் எண்: 9445190205
6 முதல் 10-வது மண்டலம் வரை பொதுமக்கள் புகார் எண்: 9445190698
11 முதல் 15-வது மண்டலம் வரை பொதுமக்கள் புகார் எண்: 9445194802
மேற்கண்ட எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.