

சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற ஜீப் கவிழ்ந்து சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டியில் இயங்கி வரும் சக்தி பட்டாசு ஆலைக்கு மாரனேரி, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பட்டாசுத் தொழிலாளர்கள் பலர் ஜீப்பில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். வழக்கம்போல் இன்று காலை இப்பகுதியிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பட்டாசு ஆலைக்கு ஜீப் புறப்பட்டது. விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி (40) என்பவர் ஜீப்பை ஓட்டிச் சென்றார்.
சுப்பிரமணியபுரம் அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்வதற்காக ஜீப்பை கந்தசாமி வேகமாக ஓட்டியுள்ளார். சாலையின் வலது புறத்தில் பள்ளம் இருந்ததால் ஜீப்பை இடதுபுறம் திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஜீப்பில் சென்ற பட்டாசுத் தொழிலாளர்கள் சூரியநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நாகேந்திர குமார் என்பவரது மனைவி குருமுத்து (30), சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி (16), மாரனேரியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜீப்பில் சென்ற மாரனேரியைச் சேர்ந்த முனீஸ் (20), இடையபொட்டல்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (20), சுந்தரமூர்த்தி (32), அபி (18), முனீஸ்வரன் (23), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சசிகலா (20), உயிரிழந்த குருமுத்துவின் மகன் பகவதி (2), பொட்டல்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (21), மாரனேரியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் மனைவி பஞ்சவர்ணம் (21), விளாம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (14), நரிக்குடியைச் சேர்ந்த பூமாரி (37) மற்றும் ஜீப் ஓட்டுநர் கந்தசாமி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த சுந்தரமூர்த்தி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சுந்தரமூர்த்தியும் உயிரிழந்தார். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.