Published : 14 Sep 2019 04:57 PM
Last Updated : 14 Sep 2019 04:57 PM

சந்திரயான்-1, மங்கள்யான் நாயகன் மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவால் ஒதுக்கப்பட்டாரா?

மயில்சாமி அண்ணாதுரை : கோப்புப்படம்

சென்னை

சந்திரயான்-1, மங்கள்யான் நாயகனும், யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவால் ஒதுக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப்பின் கடந்த 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் விக்ரம் லேண்டர் சாப்ட் லேண்டிங் ஆவதைக் காண ஏராளமான முன்னாள் விஞ்ஞானிகள், இஸ்ரா விஞ்ஞானிகள் காத்திருந்தனர். நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியைக் காண பிரதமர் மோடியும் இஸ்ரோவுக்கு வந்திருந்தார்.

நிலவின் தென்துருவத்தில் உள்ள மான்சினஸ் சி மற்றும் சிம்பிலியஸ் எஸ் எனும் இரு பள்ளங்களுக்கு இடையே விக்ரம் லேண்டர் கருவியை தரையிறக்க விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால், விக்ரம் தரையிறங்கும் காட்சியைக் காண ஏராளமான விஞ்ஞானிகள் காத்திருந்தபோது, சந்திரயான், மங்கள்யான் வெற்றிகரமாக செல்வதற்கு காரணமாக இருந்த மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மட்டும் அங்கு இல்லை.

இஸ்ரோவில் 36 ஆண்டுகால அனுபவம், சந்திரயான்-1 மற்றும் மங்கள்யான் வெற்றிகரமாக செல்வதற்கு மயில்சாமி அண்ணாதுரை முக்கியக் காரணமாக இருந்தவர். சந்திரயான்-2 திட்ட இயக்குநராக தொடக்கத்தில் நியமிக்கப்பட்டு பெரும்பாலான பணிகளை நேரடியாக இருந்து பார்த்தவருமானவரும் மயில்சாமி அண்ணாதுரைதான். இவரின் தலைமையில் ஏராளமான செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், நாடே காத்திருந்த சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்ச்சிக்கு மட்டும் அழைக்கப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது

இதுகுறித்து ஓய்வு பெற்ற இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில் " நாட்டின் ஏராளமான செயற்கைக்கோள் திட்டங்களில் அண்ணாதுரை ஈடுபட்டுள்ளார். ஆனால், விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் அன்று முக்கியவிஞ்ஞானிகளுக்கு அழைப்புவிடுத்த இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரைக்கு அழைப்பு விடுத்ததா எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.

இஸ்ரோவின் மற்றொரு முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், " செயற்கைக்கோள் பிரிவில் தனது பணிக்காலம் முழுமையையும் மயில்சாமி அண்ணாதுரை செலவிட்டவர். சந்திரயான்-1 திட்டம் வெற்றிகரமாகச் செல்ல காரணமாகவும், திட்ட இயக்குநராகவும் இருந்தவர் அண்ணாதுரை. சந்திரயான்-2 திட்டத்திலும் மிகவும் ஈடுபாடாக இருந்தவர். செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் வெற்றிகரமாக செல்வதற்கு இவரின் பங்களிப்பை மறக்க முடியாது. ஆனால், அவரை அழைக்காதது வியப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்ச்சியை காண அழைப்புவிடுக்கப்பட்டதா என்று மயில்சாமி அண்ணாதுரையிடம் நிருபர் கேட்தற்கு அவர் கூறுகையில், " எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. விக்ரம் லேண்டர் களம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் நிகழ்வைக் இஸ்டிராக்கில் இருந்து காண எனக்கு இஸ்ரோ சார்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

மேற்கொண்டு எந்த விவரங்களையும் கூற அவர்மறுத்துவிட்டார்.

அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் மயில்சாமி அண்ணாதுரையின் பங்களிப்புக்காக கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. கடந்த 2018-ம் ஆண்டு இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற அண்ணாதுரை, தற்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவின் துணைத்தலைவராக இருக்கிறார்.

விண்வெளி தொழில்நுட்பத்தில் வல்லுநரான ஒருவர் நிருபரிடம் கூறுகையில், " 130 கோடி மக்கள் கொண்ட இந்த தேசத்தில் இதுபோன்ற விண்வெளி அறிவியல் கொண்டவர்கள் மிகக்குறைவு. அவர்களின் அனுபவம், அறிவு ஆகியவற்றை திறமையாக பயன்படுத்த வேண்டும். அதை வீணாக்க அனுமதிக்க கூடாது" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x