Published : 14 Sep 2019 04:36 PM
Last Updated : 14 Sep 2019 04:36 PM

இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து: இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும்; ஸ்டாலின்

சென்னை

இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (செப்.14) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேல்விகளுக்கு பதிலளித்தார்.

இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்து உதயநிதி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது பற்றி?

அது அவருடைய வேலை, கடமை. அந்த வேலையை அவர் செய்துக் கொண்டிருக்கிறார்.

ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, ஒரே நாட்டுக்கு ஒரே மொழி இந்தி தான் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார். பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் இதுபோன்று கருத்து கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இது போன்று 2-வது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வேயில், தபால் அலுவலகங்களில்,அது தேர்வாக இருந்தாலும், வேலைவாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, முயற்சியில் ஈடுபட்டார்கள்.

அதனை, 'முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்' என்பதற்காக திமுக தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு அவைகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால், திடீரென்று இன்று அமித்ஷா கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது நிச்சயம் அமையும். எனவே, அக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவின் சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.

நாளைய திருவண்ணாமலை மாவட்டத்தில், திமுகவின் முப்பெரும் விழா நிகழ்ச்சி முடிந்த மறுநாள், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து இதனை எப்படி சந்திப்பது? எப்படி நம்முடைய எதிர்ப்புக் குரலை கொடுப்பது? என்பது பற்றி கலந்து பேசி முடிவெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம்," என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x