Published : 14 Sep 2019 04:14 PM
Last Updated : 14 Sep 2019 04:14 PM

கிரண் பேடியின் செல்போன் தொலைந்ததால் பரபரப்பு

புதுச்சேரி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செல்போன் காணாமல் போனதால் அவர் திடுக்கிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து செல்போன் கிடைத்தது.

புதுச்சேரி அரங்கனுாரில் ஏரிக்கரை அருகே உள்ள எரமுடி அய்யனார் கோயிலில் இன்று (செப்.14) கிரண்பேடி சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து, பாகூர்-கன்னியக்கோயில் சாலையில் இருக்கும் கொம்யூன் பஞ்சாயத்து குப்பை கிடங்குக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது, ஏரியின் சுற்றுப்பகுதிகளுக்கு காரில் செல்ல முடியாது என்பதால் அதனைச் சுற்றிப் பார்க்க 3 மாட்டு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாட்டு வண்டியின் மீது ஆர்வத்துடன் ஏறிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது விலையுயர்ந்த ஐபோன் மூலம் அந்தக் காட்சிகளை பதிவு செய்து வந்தார். பசுமை புதுச்சேரி என்று உற்சாகமாக கோஷமிட்ட அவர் மற்றவர்களையும் கூறச்சொல்லி உற்சாகப்படுத்தினார்.

பின்னர் மாட்டு வண்டியில் இருந்து கிரண்பேடி கீழே இறங்கினார். அப்போது செல்போனை அவர் தவறவிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் அவர் செல்போனை பார்த்த போதுதான் செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. உடனே அதுகுறித்து விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநரின் செல்போன் காணாமல் போனதால் போலீஸாரும், ஆளுநர் மாளிகை ஊழியர்களும் பதறிப்போனாரகள். உடனே ஏரி முழுவதும் காணாமல் போன செல்போனை தேடினர். நீண்ட நேரத் தீவிரத் தேடுதலுக்கு பிறகு ஏரிக்கரை பகுதியில் உடைந்த நிலையில் செல்போன் கண்டெடுக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநரின் செல்போனில் பல்வேறு முக்கிய தகவல்களும், ஆவணங்களும் இருப்பதால் அவற்றை மீட்டெடுக்கும் பணியில் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது, "மாட்டு வண்டி மீது ஏறி பேசிய துணைநிலை ஆளுநர், அதில் இருந்து இறங்கி தன்னுடைய சட்டை பையில் செல்போனை போட முற்பட்டபோது தவறி அங்கிருந்த புதருக்குள் விழுந்துள்ளது. பின்னர் சிறிது தூரம் வந்த பிறகே போன் இல்லாதது தெரியவந்தது. துணைநிலை ஆளுநரின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து அந்த ரிங்டோன் சத்தத்தின் மூலம் உடனே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. துணைநிலை ஆளுநரின் செல்போன் மீது மாட்டு வண்டி ஏறியதால் உடைந்து நொறுங்கிவிட்டதாக கூறப்படும் தகவல் பொய்யானது. செல்போன் உடையவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x