Published : 14 Sep 2019 03:39 PM
Last Updated : 14 Sep 2019 03:39 PM

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள்: கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் 3 ரோந்து வாகனங்கள்

சென்னை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்படும் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்களை கண்காணிக்க சென்னை காவல் துறையுடன் இணைந்து தனி அலைபேசி எண்ணுடன் கூடிய ரோந்து வாகனங்கள் சென்னையில் ரோந்துச் செல்லும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் சென்னை காவல் துறையுடன் இணைந்து தனி அலைபேசி எண்ணுடன் கூடிய மூன்று நடமாடும் வாகனங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. பொதுமக்கள் புகாரளிக்க எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பிரகாஷ், இன்று (14.09.2019) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்ற துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

இது குறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வருமாறு:

”சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்.33819/2018, நாள்.19.12.2018ல் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் வைக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண்.61/2019 தொடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், விளம்பர பதாகைகள் அமைக்க சென்னை உயநீதிமன்ற தடை ஆணை செயல்பாட்டில் உள்ள நிலையில் விளம்பர பதாகைகள் அமைப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அச்சக உரிமையாளகளுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளும் சட்ட திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதனையும் மீறி சட்டத்திற்கு புறம்பாக விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்கள் மீது ஒராண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு விளம்பரப் பதாகைக்கு ரூ.5,000/- வீதம் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சியின் அனுமதி உத்தரவின்றி பதாகைகள் அச்சடிக்கும் அச்சக நிறுவனங்களின் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண்.287ன்படி அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடி சீல் வைக்கப்படும் எனவும் சம்பந்தபட்ட நபர்களுக்கு நேரடியாகவும் பத்திரிகை செய்தி வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டு மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பர பதாகைகளை கண்காணித்து உடனடியாக அகற்றி அமைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே மண்டல அலுவலர்கள் மற்றும் மாநராட்சி துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இதுவரை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 3964 விளம்பர பதாகைகள் மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டு 245 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும், அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பர பதாகைகளை கண்காணித்து அகற்ற ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சியும் சென்னை காவல் துறையும் இணைந்து ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாகனம் வீதம் தனி அலைபேசி எண்ணுடன் கூடிய மூன்று ரோந்து வகனங்கள் இன்று முதல் செயல்கடுத்தப்படவுள்ளன.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைக்கப்படும் விளம்பர பதாகைகள் குறித்து மண்டலம் 1 முதல் 5 வரையிலான வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190205 என்ற எண்ணிற்கும் மண்டலம் 6 முதல் 10 வரையிலான மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190698 என்ற எண்ணிற்கும் மண்டலம் 11 முதல் 15 வரையிலான தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445194802 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு விளம்பர பதாகைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

புகார் கிடைத்தவுடன், ரோந்து வாகனங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் உடனடியாக சம்பந்தபட்ட இடத்திற்கு நேரடியாக சென்று விளம்பர பதாகைகளை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து விளம்பரம் அமைத்தவர்கள் குறித்த தகவல்களையும் பதிவு செய்த பின்னர் அவற்றை அகற்றி சம்பந்தபட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்வர், என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர் ஆர்.லலிதா, துணை ஆணையர்கள், உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x