Published : 14 Sep 2019 03:27 PM
Last Updated : 14 Sep 2019 03:27 PM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: நவீன குலக்கல்வி திட்டத்திற்கு முன்னோட்ட ஆயத்தமா? - கி.வீரமணி கேள்வி

சென்னை

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (செப்.14) வெளியிட்ட அறிக்கையில், "5 மற்றும் 8-ம் வகுப்புகளிலேயே பொதுத் தேர்வு வைத்து மாணவர்களை வடிகட்ட வேண்டுமா? இந்தத் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்து மூன்று முறை தேர்வு எழுதி மேலே தொடரலாம். மூன்று முறையும் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே வகுப்பில் கல்வியைத் தொடரலாம்.

அப்படி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்களிடையே ஒரு வகை 'நவீன தீண்டாமை'ப் பார்வையை உண்டாக்கப் போகிறார்களா? நாடு முழுவதும் சமமான கல்வித் தரம், கட்டமைப்புகள், கிராம, நகர பேதமின்றி உருவாக்குவதுதான் ஓர் அரசாங்கத்தின் முழுமையான முதல் கடமையாக இருக்க முடியும்; மாறாக இளம் பிஞ்சுகள் பள்ளிகளுக்கு வந்தால் அவர்களைத் தேர்வு என்றும், தகுதி என்றும் பிஞ்சு உள்ளங்களில் பீதியை உண்டாக்கி, மன ரீதியாக இரண்டாம் தர நிலைக்குத் தள்ளுவதுதான் மக்கள் நல அரசின் கடமையா? சிந்தனையா?

அண்ணா பெயரிலும், திராவிட பெயரிலும் ஆட்சி நடத்தக் கூடியவர்களிடம் இந்தப் பிற்போக்குப் புத்தி புகுந்தது ஏன்?

பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முன்பு இதேபோன்ற சர்ச்சை எழுந்தபோது, "மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு அரசு முடிவு செய்யவில்லை" என்று கூறினார்.

மத்திய அரசு என்ன கூறுகிறது? இந்தக் கல்வி முறையை "ஏற்பதா? நிராகரிப்பதா?" என்பதை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று தானே கூறியிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அரசு எடுத்திருக்க வேண்டிய முடிவு, இந்தத் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று சொல்லுவதற்கு தயக்கம் ஏன்? கல்வியில் கை வைத்ததால்தான் ராஜாஜி ஆட்சியை இழந்தார். கல்வியில் கை வைத்ததால்தான் எம்ஜிஆர் காலத்திலேயே மக்களவைத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வியது.

இப்பொழுது மீண்டும் கல்வியில் அதிமுக அரசு மத்திய அரசின் பேச்சைக் கேட்டு, தமிழ்நாட்டுக்கே உரிய மண்ணின் மனப்பான்மையை உணராமல் இந்தப் புதிய திட்டத்தைத் திணித்தால் அந்தக் கணமே இந்தஆட்சிக்கு முடிவுரை எழுதப் பட்டதாகப் பொருள். 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு வைத்து வடி கட்டினால் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் யார் என்கிற மனிதாபிமான சமூகநீதிக் கண்ணோட்டம் வேண்டாமா?

ஏற்கெனவே பள்ளிக் கல்வி அளவோடு இடை நிற்றல் நடைபெற்று வருகிறது. இந்தப் புதிய அறிவிப்பு மூலம் தொடக்கப் பள்ளி அளவிலேயே இடை நிற்றல் அதிகரிக்கப் போகிறது. இதில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும் கிராமப்புற மக்களும்தான் பாதிக்கப்படுவார்கள். இது கல்லின்மேல் எழுத்தே!

பள்ளிக் கல்வியிலே பத்தாம் வகுப்பில் மொழிப் பாடங்களுக்கு இனி இரு கேள்வித்தாள்கள் கிடையாது. இனி ஒரே தாள்தான் இருக்கும் என்று கூறும்போது மாணவர்களின் மன உளைச்சலைத் தவிர்ப்பதற்குத் தான் இந்த முடிவு என்று இதே அரசுதான் கூறுகிறது.

பத்தாம் வகுப்பில் மொழித் தேர்வில் இரண்டு வினாத் தாள்கள் என்பது ஒரே வினாத்தாளாக மாற்றப்பட்டுள்ளது என்பது மாணவர்களின் மன இறுக்கத்தைக் குறைப்பதாகாது; மாறாக தமிழ்மொழியின் முக்கியத்துவத்தைக் குலைக்கும் செயலே!

பத்தாம் வகுப்பு என்றால் அந்த மாணவனுக்குக் குறைந்த பட்ச வயது 15 இருக்கும். 15 வயது மாணவனின் மனநிலை பாதிப்புக்கு ஆளாகும் என்பதுபற்றி அக்கறையும், கவலையும் கொள்ளும் இதே அரசு, 5-ம் வகுப்புப் படிக்கும் 10 வயது மாணவனின், எட்டாம் வகுப்புப் படிக்கும் 13 வயது மாணவனின் மனநிலை, மன உளைச்சல் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாதது ஏன்? 5 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு, 8 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு, 10 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு, 11,12 ஆம் வகுப்புகளில் தனித்தனி தேர்வுகள், பிறகு நீட் தேர்வு, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றாலும் அடுத்து 'நெக்ஸ்ட்' என்று தேர்வு என்பதெல்லாம் 'நீரோ' மனப்பான்மையே!

எஸ்எஸ்எல்சி அரசு தேர்வுக்கு முன் பள்ளிகளில் செலக்ஷன் என்ற ஒரு பிரிவை வைத்து, அதில் வெற்றி பெற்றால்தான் அரசு நடத்தும் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத முடியும். இதற்கு பெரியாரும், திராவிடர் கழகமும் நடத்திய போராட்டத்தின் காரணமாக அது கை விடப்பட்டது என்பதையும் அதிமுக அரசுக்கு நினைவூட்டுகிறோம்.

பிள்ளைகளின் கல்வியோடு விளையாடிப் பார்க்க வேண்டாம். தமிழ்நாடு இதனை அனுமதிக்காது. அனைத்துத் தரப்பினரும் எரிமலையாக வெடித்து அரசுக்கு வரலாறு காணாத நெருக்கடியைக் கொடுக்க நேரும்," என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x