Published : 14 Sep 2019 12:50 PM
Last Updated : 14 Sep 2019 12:50 PM

பொதுத்தேர்வு மொழிப்பாடங்களில் மாற்றம்; மொழியை அழிக்கும் அரசாணையைத் திரும்ப பெறுக- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

சென்னை

பொதுத்தேர்வு மொழிப்பாடங்களில் மாற்றம் செய்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தின் இரண்டு தாள்களை ஒரே தாளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பாடத்தை எளிமையாக்குவதாக நினைத்து மாணவர்களிடையே மொழி ஆர்வத்தைக் குறைப்பதோடு எதிர்காலத்தில் தமிழ் மொழியை அழிக்கும் முயற்சியாகும்.

10-ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள்தான் என்று 10.05.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை பரிந்துரைத்தது. அப்போதே தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அவ்வாறு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் இன்று அரசாணை 161-ஐ வெளியிட்டிருப்பது மொழியின் தாக்கத்தை வேரிலேயே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியைப் பிழையின்றி எழுதவும் படிக்கவும் உதவும். அது மட்டுமல்ல மொழி இலக்கணத்தையும் ஆளுமைத் தன்மையையும் வெளிப்படுத்த உதவுகிறது. இதை நீக்குவது என்பது எதிர்காலச் சமுதாயத்தை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியாகும்.

இதன்மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் ஆசிரியர்களின் வேலைப்பளுவும் நேர விரையமும் குறையும் என்று அரசு தரும் விளக்கம் ஏற்புடையதல்ல. மொழியின் வளர்ச்சியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்ற, மற்ற பாடங்களுக்கு அக மதிப்பெண் வழங்குவது போல தமிழ் மொழிப் பாடத்திற்கும் 20 அக மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

மேலும் மாணவர்களின் மனநிலையினைக் கருத்தில் கொண்டும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும் தேர்வுகளில் வெற்றி தோல்வி என்பதை அறவே ஒழிக்க வேண்டும். மதிப்பெண் முறையை அகற்றி மதிப்பீட்டு முறையினை அமல் படுத்துவதன் மூலம் தற்கொலை எண்ணங்களையும் தவிர்க்க முடியும்.

எனவே தமிழ் மொழியைக் காப்பாற்ற அரசாணை 161-ஐத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x