

விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் என அமைச்சர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைத்து பேனர்களும் உடனடியாக அகற்றப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத் தொடக்க விழா இன்று (செப்.14) காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கே டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்களை வரவேற்கும் விதமாக அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் சாலையின் இருபுறமும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்கள் இந்த பிளக்ஸ் பேனர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் பிளக்ஸ் விழுந்து விபத்தில் சிக்கி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து சாலையில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் என அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டனர்.
இதையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் அதிமுகவினர் சென்று சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றினர். அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா நேரடியாகச் சென்று பிளக்ஸ் பேனர்களை அகற்றினார். அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்ட பின்னரே நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அகற்றப்படும் பேனர்கள்
இந்நிகழ்ச்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்து 1,185 பயனாளிகளுக்கு ரூ.9.13 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 18 இடங்களில் சிறு அம்மா பல்பொருள் விற்பனை நிலையங்களையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் சிவஞானம், சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.