‘கிரஷர்'களுக்கு புதிய கட்டுப்பாடு!- ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று மட்டுமே இயங்க உத்தரவு

‘கிரஷர்'களுக்கு புதிய கட்டுப்பாடு!- ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று மட்டுமே இயங்க உத்தரவு
Updated on
2 min read

ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் ஒரு கல் அரைக்கும் கிரஷர் மட்டுமே இயங்க அனுமதி வழங்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய உத்தரவு தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த புதிய உத்தரவு காற்று மாசை குறைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஆறுகளில் இருந்து மணல் எடுக்க கட்டுப்பாடு விதித்தும், ஆற்று மணலுக்கு மாற்றாக ‘எம் - சாண்ட்’ என்ற செயற்கை மணல் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்குமாறும் நீதிமன்றம் இரு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. தமிழகத்துக்கு ஓராண்டுக்கு சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தேவைப்பட்ட நிலையில், எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணலுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்தது.கருங்கல் ஜல்லிகளை உடைத்து தயாரிக்கப்படுவதே எம்-சாண்ட் எனப்படும் செயற்கை மணலாகும். இதுவும் கட்டுமானத் துறையின் தரக்கட்டுப்பாடான ‘ஐ.எஸ்.383’ கொண்டதுதான்.

மேலும், தரமும், வலிமையும் கூடுதலாகவே கிடைக்கும். உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபா, செயற்கை மணலால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆற்று மணலைவிட விலையும் கொஞ்சம் குறைவு. மேலும், இறக்குமதி மணல் மூலம், மணல் தேவையை பூர்த்தி செய்வதும் நீண்ட காலத்துக்கு சாத்தியம் இல்லை; நிரந்தரத் தீர்வும் இல்லை. எனவே, செயற்கைமணல் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கல் அரைக்கும்கிரஷர்களின் தேவை அதிகமானது. மாநில அளவில் சுமார் 300 கிரஷர்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கிரஷர்களின் எண்ணிக்கை 1,500- ஆக உயர்ந்துவி்ட்டது.

குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகின்றன. எம் சாண்ட் என்ற செயற்கை மணலின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏராளமான நிறுவனங்கள், கிரஷர்கள் இயக்க அனுமதி கோரி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்து வருகின்றன.

ஆனால், பாறைகளை உடைத்து, ஜல்லி, மணலாக மாற்றுவதால், கடுமையான காற்று மாசு ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு கிரஷர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், முறையான கள ஆய்வு நடத்தாமலே, அதிக அளவிலான கிரஷர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதற்கிடையில், கிரஷர் அனுமதி தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, “செப்டம்பர் 11-ம் தேதி முதல் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு இரண்டு கிரஷர்கள் இயக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், இனிமேல் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு கிரஷர் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்படும்.

வழிபாட்டுத் தளங்கள், மாநில,தேசிய நெடுஞ்சாலைகள், மக்கள் குடியிருப்புகள், மக்கள் நடமாட்டம் அதிகமான இடங்கள் அருகில் கிரஷர்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது.காற்று மாசு, ஒரு கனமீட்டருக்கு 600 மைக்ரோ கிராம் என்று இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரு கிரஷர்கள் இயங்கினால், காற்று மாசு மேற்கண்ட அளவைவிட அதிகமாகிவிடுகிறது. எனவேதான், இந்த புதிய உத்தரவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமல்படுத்தியுள்ளது” என்றனர்.

“தொடர்ந்து காற்று மாசுபட்டு வரும் சூழலில், கிரஷர்கள் தொடர்பான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய உத்தரவால், காற்று மாசு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கின்றனர்” சமூக ஆர்வலர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in