Published : 13 Sep 2019 09:33 PM
Last Updated : 13 Sep 2019 09:33 PM

பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் இரண்டு தாள் தேர்வு முறை ரத்து:  அரசாணை வெளியீடு

பத்தாம் வகுப்புக்கும் இனி மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கு முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஒரே தாள் தேர்வுமுறை அடுத்த ஆண்டுமுதல் அமலாகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளதாவது:

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மேல்நிலை முதலாம், இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் மொழி மற்றும் ஆங்கிலம் படங்களில் உள்ள முதலாம் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுக்குப் பதிலாக ஒரே தேர்வு எழுத அனுமதித்து ஆணை இடப்பட்டது.

இதனடிப்படையில் தற்போது அரசு தேர்வுகள் இயக்குனர் மேலே இரண்டாவதாக அளிக்கப்பட்ட தனது கடிதத்தில் இடைநிலை பத்தாம் வகுப்பு(SSLC) தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில படத்திற்கு இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படுவதை மாற்றி ஒரே தாளாக தேர்வுகள் நடத்திட வேண்டி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் முறையிட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் ஆங்கில பாடங்களில் இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி அமைப்பதால் பின்வரும் பயன்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆங்கில பாட ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வின் போதும் அதிக நாட்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு நேரம் செலவிடும் நிலை மாறி, கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகள் அதிக நேரம் செலவிட ஏதுவாகும்.

மொழிப்பாடம்/ ஆங்கிலப்பாடத்தில் ஒரே தேர்வுகள் எழுதுவது காரணமாக மாணவர்களின் தேர்வுக்காலம் குறைக்கப்படுவதால் அவர்களின் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தம் பெருமளவில் குறையும்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நடைபெறும் நாட்கள் குறைவதால் தேர்வு முடிவு விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கு ஒரே ஒரு தேர்வு நடத்துவதால் சுமார் 20 லட்சம் விடைத்தாள்கள் குறையும்.

இதனால் அரசு மைய அச்சகத்தில் அச்சிடுவதற்கான ஓராண்டிற்கு பயன்படுத்தப்படும் சுமார் 3 கோடி எண்ணிக்கையிலான தாள்களும் சேமிக்கப்படும். மேற்காணும் சூழ்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கருத்தை ஏற்று ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் ஆசிரியர்களை பெருமளவில் கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பட தேர்வுகளில் இரு தாள்களுக்கு பதிலாக வரும் 2019- 2020 -ம் கல்வி ஆண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும்.

அவ்வாறு தேர்வு நடத்தும்போது பாடங்களின் மதிப்பீடு முதல் மற்றும் இரண்டாம் தாளில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள சாராம்சங்களை உள்ளடக்கியதாகவும் தேர்வு நடத்த அரசு தேர்வுகள் இயக்குனர் அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது“.
இவ்வாறு அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x