Published : 13 Sep 2019 07:23 PM
Last Updated : 13 Sep 2019 07:23 PM

சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம்: பேனர் விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் முடிவு என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி 

சென்னை

பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விதிமீறல் பேனர் விவகாரத்தில் கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க நேற்று துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், இன்று (செப்.13) காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் இச்சம்பவம் குறித்து முறையீடு செய்தார்.
அப்போது, "சட்டவிரோதமான பேனர்களைத் தடுக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

அதனை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. நேற்று மாலை சுபஸ்ரீ என்ற பெண்மீது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரி மோதி உயிரிழந்தார். இதனால், அப்பெண்ணின் பெற்றோர் கடுமையான துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள், "அரசு அதிகாரிகள், மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எவ்வளவு ரத்தம் தான் உங்களுக்குத் தேவைப்படும்? சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றவும், அதனைத் தடுக்கவும் கடுமையான உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

எந்தவொரு உத்தரவையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. தலைமைச் செயலகத்தை மட்டும்தான் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவில்லை. நாங்களே எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அரசு உத்தரவுகளை நாங்கள் ஏற்று நடத்த முடியாது.

சட்டவிரோத பேனர்கள் மூலமாக சாலைகளை ரத்தத்தால் வர்ணம் பூச எத்தனை லிட்டர் ரத்தம் உங்களுக்குத் தேவைப்படும்? இந்த முறையீட்டை, வழக்காகத் தாக்கல் செய்யும் போது, கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். விபத்து ஏற்படும்போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு மட்டும் அளித்து அதிகாரிகள் பிரச்சினையை முடித்துக் கொள்கிறார்கள்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பேனர்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறி டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனை நோக்கி, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். சட்டவிரோத பேனர்களை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள், நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகளால் ஏன் அமல்படுத்த முடியவில்லை என நீதிபதிகள் கேட்டனர்.

“சட்டவிரோத பேனர்களுக்கு அரசியல் கட்சியினரே பெருமளவு காரணம். கிடா வெட்டு, காது குத்து போன்ற சொந்த நிகழ்ச்சிகளுக்குகூட பேனர் வைத்தால்தான் அமைச்சர்கள் விழாவுக்கு வருவார்களா? பேனர்கள் வைக்காவிட்டால், அமைச்சர்களுக்கு வழிதெரியாமல் போய்விடுமா, இல்லை அமைச்சர்கள் தொலைந்து போய்விடுவார்களா?

நிகழ்ச்சி நடைபெறும்போது, விதிமீறல் பேனர்கள் முன்கூட்டியே வைக்கப்படும்போது அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? பொது சாலையை ஆக்கிரமித்தும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேனர்கள் வைக்கப்படும்போதும்கூட ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை” என கேள்வி எழுப்பினர்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பரங்கிமலை துணை ஆணையர் பிராபகர், பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரிநாதன், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் விபத்துக்குக் காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திமுக தலைவர் தனது கட்சியினருக்கு பேனர் வைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதை திமுக தரப்பு வழக்கறிஞர் கூற, அதைப் பதிவு செய்த நீதிபதிகள், மற்ற கட்சியினர் நிலை என்ன, பேனர் விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை அரசியல் கட்சிகள் பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தனர்.

“அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காது. விவாகரத்திற்கு மட்டும்தான் தற்போது பேனர் வைப்பதில்லை. மற்றபடி எல்ல நிகழ்வுகளுக்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் உள்ளது என நீதிபதிகள் கூறினர்.

சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பது, மனித உரிமை மீறல். சாலைகளில் உள்ள கேமராக்கள் மூலம் இது போன்ற விதிமீறல்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கக்கூடாதா? பேனர் விழுந்ததில் உயிரிழந்த இறந்த சுபஸ்ரீயின் தந்தை புகார் அளிக்கும் வரை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர்? சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் ஏன் போக்குவரத்துக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை?

மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் கடமையைச் செய்யத் தவறியுள்ளனர், உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பறிபோயிருக்காது. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மாநகராட்சி ஆணையர் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

தலைமைச் செயலாளர் கண்காணித்து, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். வழக்கு விசாரணையை சென்னை காவல் ஆணையர் கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கை நீதிமன்றமும் கண்காணிக்கும் என எச்சரித்த நீதிபதிகள் பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டனர்.

இடைக்கால இழப்பீடை அரசு வழங்க வேண்டும் என்றும், பின்னர் அதை சம்பந்தபட்ட, கடமை தவறிய அதிகாரிகளிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x