Published : 13 Sep 2019 06:24 PM
Last Updated : 13 Sep 2019 06:24 PM

விக்ரமை விடுத்து பிரக்யானை நேரடியாகத் தொடர்பு கொள்ள முயற்சி; 14 நாட்களுக்குப் பிறகு என்ன ஆகும்?- மயில்சாமி அண்ணாதுரை சிறப்புப் பேட்டி

சென்னை

சந்திரயான் 2-ல் லேண்டர் விக்ரமை விடுத்து, ரோவன் பிரக்யானை நேரடியாகத் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக 'இந்து தமிழ் திசை'க்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் சுருக்கப்பட்ட வடிவம்:

சந்திரயான்-1, மங்கள்யான், ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் என இஸ்ரோ ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. எதனால் சந்திரயான்-2 மட்டும் இந்த அளவுக்கு சர்வதேச முக்கியத்துவம் பெற்றது?

சந்திரயான் 1-ன் மூலமாகத்தான் நிலவில் நீர் இருப்பது முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. நிலவின் துருவ வட்டப் பாதையில் பயணித்தது, முப்பரிமாணப் படங்கள், நிலவின் தரையில் நீர்த்துளிகள் இருப்பது, எப்போதும் இருட்டாகவே இருக்கும் துருவப் பகுதியில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பது ஆகிய அனைத்தும் சந்திரயான் 1-ன் கண்டுபிடிப்புகளே.

அதேபோல 2013-ல் முதன்முறையாக செவ்வாய் கிரகத்துச் சென்று சாதனை படைத்தோம். மிகக்குறைந்த செலவில், குறுகிய நாட்களில் இதை வெற்றிகரமாகச் செய்து முடித்தோம். இதனாலேயே சந்திரயான்- 2 மீது சர்வதேச அளவில் உலக நாடுகளின் கவனம் நம் மீது குவிந்திருக்கலாம்.

அறிவியலில் வெற்றி, தோல்வி என்பதே கிடையாது என்பார்கள். முயற்சிதான் வெற்றிக்கான முதற்படி என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் சந்திரயான்-2 வெற்றியா, தோல்வியா என்ற கேள்வி எழுந்திருக்கிறதே?

சந்திரயான்-2 வெற்றியா, தோல்வியா என்பதைத் தாண்டி ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கணிதத்தில் பல கட்டங்களைத் தாண்டித்தான் இறுதி விடைக்கு வருகிறோம். அதேபோலத்தான் சந்திரயான் 2-விலும் 3 கட்டங்கள் உள்ளன. நிலவின் துருவ வட்டப் பாதையை அடைவது, நிலவைச் சுற்றி வருவது, தரையைத் தொடுவது. இதில் சந்திரயான்-1 அடைந்த தூரத்தை இதிலும் அடைந்துவிட்டோம். சந்திரயான் 1-ஐ விட அதிகத் திறன் கொண்ட இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் நிலவின் வளங்களை இன்னும் துல்லியமாக ஆராய முடியும்.

இந்தியாவின் முதல் விண்வெளிக்கலன் எஸ்எல்வி 3-ன் தோல்வியைப் புரிந்துகொண்டதால்தான் அடுத்தடுத்த வெற்றிகளை அடைய முடிந்தது. சந்திரயான்-1 வெற்றி என்றால், சந்திரயான்-2 அடுத்தகட்ட வெற்றி என்று சொல்லலாம். எனினும் சில பின்னடைவுகளால், நாம் பாடம் கற்றிருக்கிறோம். ஆனாலும் இது சிறிய சறுக்கல்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

நிலவுக்கு அதீத வேகத்தில் பயணித்த லேண்டர் விக்ரமை crash landing (வேகமாக தரையில் மோதச் செய்து இறக்குவது) செய்யாமல் soft landing (மெதுவாகத் தரையிறங்கச் செய்தல்) செய்தது ஏன்?
சந்திரயான் 1-லேயே crash landing செய்துவிட்டோம். அடுத்தகட்ட முயற்சியாக சந்திரயான் 2-ல் soft landing செய்ய முடிவெடுத்தோம். இதுவரை மனிதன் துருவப் பகுதிகளில் இறங்கியதில்லை. மனிதன் இறங்கும்போது, crash landing செய்ய முடியாது. மெதுவாக இறங்கினால்தான் அடுத்தகட்டத்துக்கு நகர முடியும் என்பதாலேயே soft landing செய்ய முடிவெடுக்கப்பட்டது.

விக்ரமின் மோட்டார்களில் பழுது ஏற்பட்டதாலேயே, தலைகுப்புற விழுந்ததாகவும் சுற்றுவட்டப் பாதையில் இருந்து தவறியதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அவை உண்மையா?

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதை இஸ்ரோதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கவேண்டும். விக்ரமில் 4 இயந்திரங்களும் ஒரேமாதிரி இயங்கவேண்டும். எரிபொருள் தன்மையைக் குறைக்கும்போது ஏதாவது ஒரு இயந்திரம் கோளாறாக வாய்ப்புண்டு. அது விக்ரமின் நிலைப்பாட்டை மாற்றும். உதாரணத்துக்கு ஒரு காரை 3 பேர் இயக்குவது போன்ற நிலை ஏற்படும். ஏற்கெனவே நாம் இங்கிருந்து இயந்திரத்தை இயக்கும் கட்டுப்பாடு, சரியாக இயங்காத நிலையால் ஏற்படும் கட்டுப்பாடு, கோளாறின் காரணமாக ஏற்படும் அதீத தடுமாற்றம் ஆகியவை ஏற்பட்டது. இதனாலேயே விக்ரம் கட்டுப்பாட்டை இழந்தது.

விக்ரமை உயிர்ப்பிக்க ஏன் 14 நாட்கள் மட்டுமே அவகாசம்?

14 நாட்கள் மட்டுமே நிலவில் பகல் பொழுதாக இருக்கும். செப். 7-ம் தேதி, சந்திரயான்-2 நிலவில் இறங்கியிருக்கிறது. 21-ம் தேதி வரை அங்கு சூரிய ஒளி இருக்கும். குளிர் ஆரம்பித்தபிறகு வெப்பநிலை மைனஸ் 150 டிகிரி செல்சியஸுக்குச் சென்றுவிடும். அப்பொழுது விக்ரமின் சோலார் பேட்டரிகள் செயலிழந்துவிடும்.

அமெரிக்க விண்வெளி மையமான நாசா, விக்ரமை உயிர்ப்பிப்பதில் நம்முடன் கைகோத்திருக்கிறது. சூரியனுக்கு அருகே நாசா அனுப்பிய ஸ்ட்ரீயோ பி-ன் தொடர்பு 22 மாதங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. விக்ரமை மீட்பதில் நாசா - இஸ்ரோ கூட்டு முயற்சிகள் எந்த அளவுக்குப் பயனளிக்கும்?

14 நாட்கள் முடிந்தபிறகு மிகப்பெரிய கேள்விக்குறி எழும். அதற்குள் எல்லா சாத்தியக்கூறுகளையும் நாம் முயன்று பார்க்கலாம். சில நாட்கள், சில வாரங்கள் சமிக்ஞையே இல்லாத பல செயற்கைக்கோள்களில் திரும்பத் திரும்ப முயற்சித்து உயிர்ப்பித்திருக்கிறோம். நிலவு அல்லாத இடங்களில் இது பலமுறை நடந்திருக்கிறது. அந்த நம்பிக்கை இஸ்ரோவுக்கு இருக்கலாம்.

ஒருவேளை கடைசிவரை லேண்டர் விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாவிட்டால், அதுனுள் இருக்கும் ரோவர் பிரக்யான் என்ன ஆகும்?

கடைசி வரை விக்ரமுக்குள்ளேயேதான் இருந்தாக வேண்டும். பிரக்யான் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனுடைய ஆயுட்காலம் முடிந்துவிடும்.

எத்தனையோ தோல்விகளை இஸ்ரோ இதுவரை சந்தித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் முறையான விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. இம்முறை ஏன் எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை?

எனக்குத் தெரியவில்லை. விக்ரமை உயிர்ப்பிக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்னும்போது, சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் குழு அதிலேயே நேரத்தைச் செலவிடுகிறது. அவர்களின் கவனம் முழுக்க, அதை உயிர்ப்பிப்பதில்தான் உள்ளது. பிரக்யானை நேரடியாகத் தொடர்புகொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏன் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது விஞ்ஞானிகளுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அடுத்தகட்டம் என்ன என்பது குறித்த வேலைகளில் இருப்பதால் சொல்லாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சந்திரயான்-2 பின்னடைவால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் சிக்கல் ஏற்படுமா?

ஏற்படாது. இரண்டு திட்டங்களும் வெவ்வேறானவை. நிலவுக்குச் செல்லும் திட்டங்கள் இருந்திருந்தால் அதைத் தொடர்ந்து செயல்படுத்த யோசிக்கலாம். ஆனால் நிலவுக்குச் செல்லாத வேறு திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இரண்டின் தொழில்நுட்பங்களும் வேறு வேறு. அதனால் ககன்யான் திட்டம் தடைபடாது.

சந்திரயான்- 1 உருவாக்கத்துக்குக் காரணமானவர் நீங்கள். சந்திரயான் 2-வில் உங்களின் பங்கு என்ன?

சந்திரயான் 1-வை உருவாக்கி 2008-ல் நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினோம். 2014-ல் மங்கள்யானை செவ்வாய்க்கு அனுப்பினோம். 2015-ல் சந்திரயான்- 2 உருவாக்கத்தை ஆரம்பித்தோம். லேண்டர் மற்றும் ரோவர் உருவாக்கப்பட்டது. 2016-17 வாக்கில் சந்திரயான் 2-வை அனுப்பத் திட்டமிட்டோம். பரிசோதனைகள் நடைபெறத் தொடங்கின. 2018 ஆகஸ்ட் 1 வரை சந்திரயான்-2 திட்டத்தில் இஸ்ரோவில் இருந்தேன்.

பல காரணங்களால் தொடர்ந்து சந்திரயான்-2 தள்ளிப்போனது. 2007-ல் ஆரம்பித்த பணிகள் 2019-ல் முடிவடைந்த பிறகு, நிலவுக்கு அனுப்பப்பட்டது. சந்திரயான்-2 உருவாக்கத்தில் முழுமையாக உடன் இருந்திருக்கிறேன்.

தோல்விகளுக்குத் தலைவர் பொறுப்பேற்பதையும் வெற்றிக்குக் குழுவைப் பொறுப்பேற்கச் செய்வதையும் அப்துல் கலாம் நடைமுறைப்படுத்தினார். ஆனால் சந்திரயான் 2 நிகழ்வில் இஸ்ரோ தலைவர் சிவன் கண்கலங்கியதும் அவரை பிரதமர் மோடி ஆரத்தழுவி ஆறுதல் சொன்னதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகக் கூறப்படுகிறதே...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கலாம், கலாம்தான். அப்போதிருந்த நிலையும் இப்போதுள்ள நிலையும் வேறுவேறு. இப்போது பிரதமரும் உடன் இருக்கிறார். அவரைத் தாண்டி மற்றவர்கள் பேச முடியுமா என்று தெரியவில்லை. ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு திட்டம் வெற்றியடைந்தாலும் கூட, பிரதமர் இருந்தால் அவர்தான் பேசுவார்.

உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வில் பின்னடைவு ஏற்பட்டதால், சிவன் கண்கலங்கி இருக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு விதத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்கள். வருத்தத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதற்காக பிரதமர் ஆறுதல் கூறியிருக்கலாம். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்தத் தோல்வியில் இருந்து, பின்னடைவில் இருந்து எதைக் கற்றுக்கொண்டோம் என்பதை உடனே தெரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். இப்போது செய்துகொண்டிருப்பதை அப்போதே செய்திருக்கலாம்.

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

க.சே.ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x