Last Updated : 13 Sep, 2019 05:26 PM

 

Published : 13 Sep 2019 05:26 PM
Last Updated : 13 Sep 2019 05:26 PM

பெரியாறு அணையில் செய்தி சேகரிக்க தமிழகப் பத்திரிகையாளர்களுக்கு கட்டணம்: கேரள வனத்துறை உச்சகட்ட அத்துமீறல்

குமுளி

தேக்கடிக்கு செய்தி சேகரிக்கச் செல்ல தமிழகப் பத்திரிகையாளர்களுக்கு சில தினங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் போல மூன்றுவிதக் கட்டணம் செலுத்தி செய்தி சேகரிக்கச் செல்லும்படி கேரள வனத்துறை தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்து தேனி ஆட்சியரிடம் பத்திரிகையாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக பெரியாறு அணை இருந்து வருகிறது. 999 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கேரள-தமிழக அரசுகள் நீர் பங்கீடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சில ஆண்டுகளாகவே கேரளாவின் அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஏற்கெனவே நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் 136 அடியாகக் குறைத்தது. பின்பு இருமாநில அரசுகளும் தனித்தனியே நீதிமன்றம் சென்றதால் பிரச்சினை முடிவிற்கு வராமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு ஒருங்கிணைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 2006-ல் 142 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்தலாம். பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு பின்பு 152 அடியாக அதிகரிக்கலாம் என்று தீர்ப்பு வெளியானது.

ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் 2011-ல் விவசாயிகள், பொதுமக்கள் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 2014-ல் இத்தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இழந்த நீர்மட்ட உரிமை பெரும் போராட்டத்திற்குப் பிறகே மீட்கப்பட்டது. தொடர்ந்து நீர்பிடிப்புப் பகுதியின் தொடக்க இடமான முல்லைக்கொடியில் தமிழக மழைமானியைக் கண்காணிக்கவும் கேரள அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர்.

அணைப்பகுதியில் உள்ள மின்சார வசதிகளைத் துண்டித்து தமிழக அதிகாரிகள் அங்கு தங்க முடியாத அளவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆனவச்சால் போன்ற நீர்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமித்து வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தேக்கடி படகு குழாம் பகுதியில் வர்த்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுபோன்று கேரள வனத்துறை தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகப் பத்திரிகையாளர்கள் தேக்கடி பகுதியில் கட்டணம் செலுத்தித்தான் செய்தி சேகரிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பதிவு எண்ணைக் குறித்துவிட்டு பத்திரியைாளர்களை அனுப்பி வைப்பது வழக்கம். தற்போது இதற்கு கேரள வனத்துறை தடை விதித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் போல ஆனவச்சாலில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகன, நுழைவு மற்றும் பேருந்துக் கட்டணம் செலுத்திவிட்டே உள்ளே செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி நுழைவுக்கட்டணம் ரூ.45-ம், பேருந்துக் கட்டணம் ரூ.25-ம் சேர்த்து ரூ.65-ம், இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.45-ம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள் கேரள வனத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேனி ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் இன்று மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஆட்சியர் இடுக்கி ஆட்சியர் மற்றும் கேரள வனத்துறையிடமும் இது குறித்துப் பேசுகிறேன் என்றார்.

கேரள அரசு தொடர்ந்து தமிழக உரிமைக்கு எதிராகச் செயல்பட்டு வருவது விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x