

புதுச்சேரி
புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களால் விபத்து நடைபெற வாய்ப்புள்ளதால் அதை வைத்தோரே அகற்ற வேண்டும் எனவும், அகற்றாத இடங்களில் அரசுத் தரப்பே அகற்றி வழக்குப் பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
சுபஸ்ரீ
இந்நிலையில், பேனர் விபத்தால் சென்னையில் நடைபெற்ற நிகழ்வை அடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (செப்.13) வெளியிட்ட அறிக்கை:
"சென்னையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர் சுபஸ்ரீ இறந்த செய்தியால் மன வேதனையடைந்தேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
புதுச்சேரியின் முக்கியப் பகுதிகளிலும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தின் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது புதுச்சேரியிலும் காற்றுடன், மழை பொழிவதால் இதுபோன்ற விபத்துகள் புதுச்சேரியிலும் நடைபெற வாய்ப்புள்ளது. முன் அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது. உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் இதுபற்றி கலந்து ஆலோசித்து, அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது உள்ளாட்சித் துறை மூலம் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அகற்றப்படாத பேனர்களை அரசுத் தரப்பிலிருந்து அகற்றி அதற்கான தொகை சம்பந்தப்பட்டோரிடம் வசூல் செய்யப்படும். சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நகரெங்கும் பேனர்கள்: விளக்கம் கேட்டு அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கடிதம் எழுதிய ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயத்தின் 50-வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி முழுக்க ஏராளமான இடங்களில் பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ சிவா உள்ளிட்டோர் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இச்சூழலில் நமச்சிவாயத்துக்கு ராஜ்நிவாஸ் என அச்சிடப்பட்டுள்ள பக்கத்தில் விளக்கம் கேட்டு கிரண்பேடி கைப்பட சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில், நகரெங்கும் வைத்துள்ள பேனர்கள் தங்கள் ஒப்புதலுடன் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். இவ்விஷயத்தில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்றும் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
செ.ஞானபிரகாஷ்